என்னுடைய செயல்களுக்கு அரசியல்சாயம் பூச முற்படுகின்றார்கள்… (மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் – எம்.தயாபரன்)

அவர்களுடைய அரசியலைச் செய்வதற்கு நான் நிருவாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதற்காக எனது செயற்பாடுகளுக்கு அரசியற் சாயத்தைப் பூசி பிழையாக வழிநடத்த முற்படுகின்றார்கள். மாநகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய செயற்பட முடியுமே தவிர முதல்வரின் அறிவுறுத்தல்படி செயற்பட முடியாது என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகரசபை நடவடிக்கைகளைப் பொருத்தவரையில் சபை நடவடிக்கைகளைத் தொடர்வதா இல்லையா என முடிவெடுப்பது முதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்களின் முடிவைப் பொருத்தது ஆனால் மாநகரசபை ஆணையாளராக, மாநகரசபையின் செயலாளராகச் செயற்படுகின்ற எனது செயற்பாடுகளை மாநகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய செயற்படுத்த முடியுமே தவிர மாநகரசபையின் முதல்வரின், உறுப்பினர்களின் அறிவுறுத்தல்படி செயற்படுத்த முடியாது.

இன்றைய அமர்வு தடைப்படுவதற்குக் காரணம் சபையின் கூட்டக் குறிப்புகள் சமார்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விடயம் தொடர்பாக நான் கடந்த மாதம் 22ம் திகதி சபை அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர் மாநகரசபை அமர்வுக்கான அழைப்பிதல் மாநகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கு எதிரன முறையில் விடுக்கப்பட்டிருந்தமையைச் சுட்டிக் காட்டியிருந்தேன். எனவே அந்தக் கூட்டமானது சட்ட வலுவற்றது என்றும் அதனை இடைநிறத்துமாறும் கோரியிருந்தேன். அவ்வாறு இல்லாத பட்சத்திலே நடைபெற்ற கூட்டம் சட்டரீதியானது என்று உறுதிப்படுத்தும் வரை அந்தக் கூட்டத்திற்கான கூட்டக் குறிப்பினை வழங்க முடியாது என்று நான் தெளிவாக கடந்த மாதம் 18ம் திகதியே உள்ளுராட்சி ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.

மாநகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய ஒவ்வொரு கூட்டங்கள் தொடர்பான அறிவித்தல்களும் நான்கு வேலை நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும். எமது மாநகரசபையைப் பொருத்த வரையில் இந்த விடயத்தை நான் தொடர்ச்சியாக வலியுத்தி வருகின்றேன். ஆனால் அவ்வாறான கருத்துகள் எவையும் இந்த சபையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆனால் இம்முறை பதினைந்து உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அன்றைய கூட்டத்தைச் சட்டவலிதற்றதாக ஆக்குமாறு கோரியிருக்கின்றார்கள். அந்தப் பதினைந்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அந்த விடயத்தை நான் உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் அறிவித்து இதற்கான முடிவு கேட்டிருந்தேன். இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட விதமானது தவறு என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே தவறான அடிப்படையில் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கு கூட்டறிக்கை சமர்ப்பிக்க முடியுமா என்பது பற்றி உள்ளுராட்சி ஆணையாளரோ அல்லது அமைச்சின் செயலாளரோ தெரியப்படுத்தும் இடத்து அதனை நாங்கள் வழங்குவோம்.

இந்த விடயத்தைப் பொருத்தவரையில் எமது நிருவாகப் பகுதியானது சட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டிருக்கின்றது. இவர்களது அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து நாங்கள் வழங்க முடியாது. சட்டத்தின்படி மாத்திரமே நாங்கள் செயற்பட முடியும். எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எமது நிருவாக செயற்பாடுகளுக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இங்கு கடமையைப் பொறுப்பேற்கும் நேரத்தில் 2019, 2020ம் ஆண்டுக்குரிய செயற்திட்டங்கள் செயற்படுத்தபடாமல் இருந்தன. அவற்றைப் படிப்படியாகப் பூர்த்தி செய்து தற்போது 2021ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். கொவிட் காலத்திலும் எங்களால் முடிந்தவரையில் எங்களது சக்திக்கு ஏற்ற வகையில் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். கடந்த காலத்தில் முழு வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்திருந்தார்கள். ஆனால் நாங்கள் மாநகரசபையூடாகவே செய்து கொண்டு வருகின்றோம். எங்களுக்கிருக்கும் ஆளணியை வைத்துக் கொண்டு எவ்வளவு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியுமோ அதற்கும் மேலாக நாங்கள் கடமைகளை ஆற்றியிருக்கின்றோம். தற்போதும் கூட இதர அமைச்சுகளினூடாக சுமார் 70 வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் இவ்வருடத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

ஆளுநர் அவர்கள் மாநகரசபை நிருவாக நடவடிக்கைகளில் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை மாறாக மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் இருக்கின்ற சகல வடிகாண்களையும் துப்பரவு செய்ய வேண்டும். அதற்காக இராணுவத்தின் உதவிகளையும் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று கூட்டுப்பசளை செய்வது தொடர்பில் கூடிய ஏற்படுகள், நிதி உதவிகள், தொழில்நுடட்ப வசதிகள், தனியார் அரச இணைப்பு என்பவற்றைச் செய்து தந்திருக்கின்றார்.

இவற்றின் மூலம் ஆளுநர் அவர்கள் மாநகரசபைச் செயற்பாடுகளுக்குத் தனது ஒத்துழைப்பினைத் தந்திருக்கின்றாரே தவிர எந்தவிதமான இடையூறுகளையு எற்படுத்தவில்லை. மேலெழுந்தவாரியாக ஆளுநர் ஆணையாளரை வழிப்படுத்துகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நான் இலங்கை நிருவாக சேவையிலே முப்பது வருட அனுபவத்தைக் கொண்டுள்ளேன். பல திணைக்களங்களில் கடமையாற்றியிருக்கின்றேன். சட்ட அடிப்படையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய ஊழியர்களை நான் கட்டுப்படுத்துவதாகச் சொல்லுகின்றார்கள். அது எவ்வாறு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடந்த காலங்களை விட எனது ஊழியர்கள் நல்ல மகிழ்ச்சியோடு கடமையாற்றுகின்றார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். எனவே அவர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை.

மாநகரசபை நிருவாகத்தைப் பொருத்தவரையில் அனைவரும் உணர்ந்து கொள்ளக் கூடிய விடயம் என்னுடைய செயல்களுக்கு அவர்கள் அரசியல் சாயம் பூச முற்படுகின்றார்கள்.  அவர்களுடை அரசியலைச் செய்வதற்கு நான் நிருவாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதற்காக எனது செயற்பாடுகளில் அரசியற் சாயத்தைப் பூசி பிழையாக வழிநடத்த முற்படுகின்றார்கள். நான் என்னுடைய கடமைகளிலே தவறிழைத்திருந்தால் என்னுடைய தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் என்னுடைய மேலதிகாரிகளுக்கு இருக்கின்றது. இங்கு எவ்வித ஒழிவு மறைவும் இல்லை. சகல நிருவாக நடவடிக்கைளும் மிகத் தெளிவாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். மாநகரத்தின் அபிவிருத்திப் பணிகள் எமது ஆளணிக்கும் வளங்களுக்கும் ஏற்ற வகையில் மிகச் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.