வட இலங்கையில் சீன வேடதாரிகள்

தமது வல்லரசு நலன்களை பேணுவதற்காக தமிழர்களின் மீது அதிக கரிசனையை அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலத்தில் காட்டுவதை தொடர்ந்து ஏட்டிக்கு போட்டியாக சீன தூதுவரும் ஏனைய சீன அதிகாரிகளும் வட பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதன் உச்சக் கட்டமாக வேட்டி அணிந்து வேடதாரிகளாக நல்லூர் கோவில் பூஜையிலும் பங்கேற்று அதை ஊடகங்களில் பிரபலப்படுத்துவதற்காக நல்லூரானுக்கு புறமுதுகு காட்டி அவமதிக்கும் படமொன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள். தமது சொந்த நாட்டில் மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனர்கள் இலங்கையில் மத அனுஷ்டானங்களை கைக்கொள்ளுகிறார்களாம் . போதாக்குறைக்கு வடபகுதி கடலை சூறையாடிக் கொண்டிருக்கும் சீனர்கள் வடபகுதி மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்றார்களாம். ஏனைய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் தூதர்கள் வட பகுதிக்கு வருவதற்கும் சீன தூதுவர் வருவதற்கும் அடிப்படையில் ஒரு பாரிய வேறுபாடு இருக்கிறது. அதாவது ஏனைய பல நாடுகள் கடந்த காலங்களிலும் தற்போதும் இலங்கையில் ஒரு இனப்பிரச்சினை இருக்கிறது சிறுபான்மையினருக்கு பாரபட்சம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் ஏனைய சர்வதேச கூட்டங்களிலும் குரல் எழுப்பி இருக்கின்றன. ஆனால் சீனா இலங்கையில் சிறுபான்மையினருக்காகவோ மனித உரிமைகளுக்காகவோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்கவில்லை. மாறாக கடந்த காலத்தில் பேரினவாதத்துடன் இணைந்து தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக முதன்மைப் பங்காளியாக செயல்பட்டிருக்கிறது. இப்போது முழு இலங்கையையும் சுரண்டி வளங்களை அபகரிப்பதற்கு பல்வேறு சதி திட்டங்களை இயங்கிவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வட பகுதி விஜயமும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பல தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் தமிழ் ஊடகவியலாளர்களும் அண்மைக் காலங்களில் அடிக்கடி சீனாவுக்கு சென்றுவரும் நிலையில் தமிழ் பேசும் மக்கள் சீனாவின் சதி திட்டங்கள் குறித்து அவதானமாக இருப்பது மிகவும் அவசியம்.
சீனா உண்மையாக நேர்மையாக இலங்கையின் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் துணை போவதானால் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டும்
1. நிலங்கள் தனியருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ சொந்தமாக இருப்பதனால் அதனை சீனர்கள் வாங்கலாம் விற்கலாம். ஆனால் கடற்கரையும் அதை அண்டிய கடலும் அந்த பகுதியில் தொன்று தொட்டு மீன் பிடித்துவரும் மீனவர்களுக்கு சொந்தமானது. எனவே பூநகரி உட்பட்ட இலங்கையின் மீனவர்களுக்கு சொந்தமான கடலில் அவர்களை வெளியேற்றி கடலட்டை வளர்ப்பது போன்ற செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. நச்சுக் கிருமிகள் நிறைந்த சேதன உரத்தை இலங்கைக்குள் செலுத்த முயல்வது இல்லாவிட்டால் ஒப்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றி கிருமி உரத்துக்காக இலங்கையிடம் இருந்து நட்டஈடு பெறுவது நிறுத்தப்பட வேண்டும். கிருமி உரத்துக்காக பல ஆயிரம் வறிய இலங்கை மக்களின் நிவாரணத்துக்கு பயன்படக் கூடிய பல பில்லியன் டொலர்களை இலங்கையிடம் இருந்து அநியாயமாக அபகரித்துக் கொண்டு சில மீனவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணத்தை தருவதைக் கண்டு மகிழ இலங்கையர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை என்பதை சீனா உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. இலங்கையில் கட்டுமானப்பணி உட்பட்ட சீன முதலீட்டுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இலங்கையருக்கு குறைந்த பட்சம் 50% வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து முற்றுமுழுதாக சீனாவில் இருந்து சிறைக்கைதிகள் மற்றும் தொழிலாளர்களை கொண்டுவந்து மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் இலங்கை மக்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்துக்கும் எந்தவித நலனும் இல்லாத நிலையில் அந்த திட்டங்களை இலங்கையின் பொருளாதாரத்தை சுரண்டி கடன் சுமையை அதிகரிக்கும் செயல்பாடாகவே இலங்கை மக்கள் கருதுவார்கள் என்பதை சீனா உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனியாவது சீனா திருந்தி இலங்கையின் அபிவிருத்திப் பங்காளியாக வருமா அல்லது தொடர்ந்து தனது சதிச்செயல்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சுரண்டி ஷேஸ்பியரின் நாடகத்தில் வரும் இரக்கமற்ற வியாபாரி ஷைலாக் போல செயல்படுமா என்பதை எதிர்காலம் விரைவில் வெளிப்படுத்தும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்