ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேஸ்புக் மூலம் பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மோசடி கும்பல் 

 

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 7 ஆண்கள், மற்றும் 2 பெண்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த மார்ச் 2020ம் ஆண்டு முதல் மலேசியாவில் செயல்பட்டு வந்த இந்த மோசடி கும்பல், சமூக ஊடகங்கள் வழியாக போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை செய்து வந்துள்ளது.

“பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஆஸ்திரேலிய விசா பரிசீலனைக்காக 1,400 மலேசிய ரிங்கட்டுகள் (இந்திய மதிப்பில் 25 ஆயிரம் ரூபாய்) பெறப்பட்டுள்ளது. பணம் பெற்ற பின்னர் போலியான விண்ணப்ப படிவம், ஆஸ்திரேலிய உள்துறை வழங்குவது போன்று போலியான ஆவணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த கும்பல் அனுப்பி வைத்துள்ளது. வங்கதேசிகள், மலேசியர்கள், பாகிஸ்தானியர்கள் இந்த கும்பலை நம்பி ஆஸ்திரேலிய விசாவுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்,” என மலேசிய வர்த்தக குற்ற புலனாய்வு துறையின் இயக்குநர் கமருதீன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக 1,023 புகார்கள் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்துக்கு வந்துள்ளதாகவும் மலேசிய காவல்துறை 155,472 மலேசிய ரிங்கட்டுகள் (இந்திய மதிப்பில் 27 லட்சம் ரூபாய்) இழப்பு தொடர்பான 28 புகார்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Speed Agency Visa மற்றும் Eco Travel Malaysia உள்ளிட்ட பெயர்களைக் கொண்டு பேஸ்புக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்திருக்கிறது. பேஸ்புக் பெயர், இணைய முகவரியை மாற்றிய போதிலும் ஒரே பாணியிலான மின்னஞ்சல், ரசீது, சமூக ஊடக அணுமுறையுடனேயே இக்கும்பல் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.