தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த்தேசியக் கூட்டு மேதினம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த்தேசியக் கூட்டு மேதினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை வந்தடைந்ததும், அங்கு மேதின எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பேரணியில் தற்கால வாழ்வியல் நிலையை எடுத்தியம்பும் வகையிலான ஊர்திகளும், நூற்றுக்கணக்கான இளைஞர்களின் ஒன்றிணைவினாலான மோட்டார் சைக்கிள் பவனியும் இடம்பெற்றிருந்த சமநேரத்தில் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலரும் எழுச்சிக் கோசங்களையும், அரசுக்கு எதிரான மற்றும் தமிழினப் படுகொலைக்கும், காணாமலாக்கப்பட்டோருக்கும் நீதி கோரும் வகையிலான உணர்ச்சிக் கோசங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த மாபெரும் சனத்திரட்சியோடு நடைபெற்ற இத் தமிழ்த்தேசியக் கூட்டு மே நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர்.பத்மநாதன் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களின் பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.