# நாடாளுமன்றத்தைக் கூட்டுவதா? # முஸ்லிம் உடலங்களை எரிப்பதா? # நிவாரண நிதி கிடைக்குமா? – மஹிந்த ‘கப்சிப்’

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுதல்

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளால் நேற்றும் வலியுறுத்தப்பட்டது. அரசமைப்புக்கு அமைவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அப்படியானால் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் அது நடைபெறவேண்டும். அந்த விடயம் நடக்கவேண்டுமாக இருந்தால் தேர்தல் மே மாதம் இறுதியில் 28ஆம் திகதியாவது நடக்கவேண்டும். தேர்தல் அந்தத் திகதியில் நடக்க தேர்தல் பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குச் சாத்தியமில்லாத நிலைமை காணப்படுகின்றது.

ஜூன் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் சட்டச் சிக்கல் எழும். அதனை விட தற்போதுள்ள காபந்து அரசின் பதவிக் காலமும் ஜூன் 2ஆம் திகதியுடன் முடிவடைந்து விடும். இதன் பின்னர் நாட்டில் அரசு இல்லாத நிலைமை எழும்.

தற்போதைய புதிய சூழலைக் கையாள்வதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. அதற்கு சட்டவாக்க சபையான நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க இதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் விமல் வீரவன்ஸ, விஜயதாஸ ராஜபக்ச, உதய கம்மன்பில போன்றோர் எதிர்ப்பு வெளியிட்;டனர்.

எரிப்பதா? புதைப்பதா?

கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஆட்சேபம் வெளியிட்டனர். உலக சுகாதார நிறுவனம் கூட, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இலங்கையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. அதனை விட இலங்கையில் இனிமேல் கொரோனால் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரியூட்டப்படும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

இதேவேளை, அரசின் இந்த நடவடிக்கையால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் தமது உடலை எரிப்பார்கள் என்ற அச்சத்தால் கொரோனா தொற்று ஏற்பட்ட முஸ்லிம்கள் அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் அபாய நிலைமையும் ஏற்படும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு விமல் வீரவன்ச, அத்துரலிய ரத்தன தேரர், உதய கம்மன்பில போன்றோர் எதிர்ப்பு வெளியிட்டனர். இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, நாங்கள் இந்த விடயம் தொடர்பில் தனியாகக் கதைப்பதற்கு கேட்பதைக் கூட எதிர்கின்றீர்களே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியாக இருந்தார்.

நிவாரண நிதி கிடைக்குமா?

தெற்கில் உள்ளூராட்சி சபைகள் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கில் அதற்கு நேர் எதிர்மாறான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு அரசும் உதவி செய்யவில்லை. உள்ளூராட்சி சபைகளும் அதற்கு வைத்துள்ள நிதியை செலவு செய்ய அனுமதிக்காவிடின் என்ன செய்வது என்ற விடயத்தை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய கூட்டத்தில் எழுப்பினார். அதற்கும் மஹிந்த பதிலளிக்கவில்லை.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொரோனா தொற்று தடுப்புக்காக அதிலிருந்து உயிர் பாதுகாப்புக்காக ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அன்றாட உழைப்பாளிகள் நிவாரணம் எதுவுமின்றி வாடுகின்றார்கள். அவர்கள் இப்படியே இருந்து பட்டினிச் சாவை எதிர்கொள்வார்களா? பட்டினியால் சாவதை வட ஊரடங்குச் சட்டத்தை மீறுவதற்கே முயற்சிப்பார்கள். எனவே அரசு அவர்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்