இராணுவ ஆட்சி இல்லை என்று மறுக்கிறது அரசு!
“இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.”
– இவ்வாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச கட்டமைப்பில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்குக் கூட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இப்படியான கருத்துகளை சமூகவலைத்தளங்களில் உருவாக்கும் நபர்கள் யார்? இராணுவத் தளபதியாக இருந்தவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து, இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இதன் பின்னணியில் செயற்படுகின்றனர். சரத் பொன்சேகா, மகேஷ் சேனாநாயக்க ஆகிய இருவரையுமே ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் விசேட மருத்துவ நிபுணராவார். குறிப்பாக நியமனம் வழங்கும்போது அவர் இராணுவமா, எந்த இனத்தை, மதத்தைச் சார்ந்தவர் என்று அல்லாமல், தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். அதனையே ஜனாதிபதி செய்து வருகின்றார். இராணுவ மருத்துவ அணியில் இருந்த திறமையான – தகுதியுடைய மருத்துவ அதிகாரியே இவர். எனவே, அவரின் தகமையில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. அது இராணுவ மயமாக்கல் செயற்பாடும் கிடையாது.
கடந்த ஆட்சியின்போது 6 நாடுகளுக்குத் தூதுவர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்படி செய்தவர்களே குறுகிய அரசியல் நோக்கில் தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
நாட்டுக்குப் புதியதொரு வழியைக் காட்டவே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்துள்ளார். அவர் ஒரு இராணுவ அதிகாரி. அவர் போன்ற தலைவர் தற்போதைய சூழ்நிலையில் இல்லாது இருந்திருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்?
அமெரிக்க வரலாற்றில் இதுவரை 44 பேர் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களில் 26 பேர் இராணுவத்தில் இருந்தவர்கள்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை