ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள் – சஜித் திட்டவட்டம்

“கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி முடிவு கட்டுவர்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கின்றது என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், இதனை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மறுத்திருந்தார். இதற்குப் பதில் வழங்கும்போதே முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று அவர் தலைமையில் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் வந்தது தொடக்கம் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்குள் முக்கிய உயர் பதவிகளில் அவர்களுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சியை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றது. இதை எக்காரணம் கொண்டும் ராஜபக்ச அணியினர் மறுக்கவே முடியாது.

சிறுபிள்ளைக்குக் கூடவே இன்று நாட்டில் நடப்பது ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி என்பது தெரியும். ஒட்டுமொத்த மக்களையும் அடிமைத்தனத்தில் வைத்திருக்கவே இப்படியான ஆட்சியை ராஜபக்சக்கள் முன்னெடுக்கின்றனர்.

2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 வருடங்கள் இந்த நாட்டில் ராஜபக்சக்களின் இப்படிப்பட்ட மோசமான ஆட்சி நிலவியது. இதற்கு 2015இல் நடைபெற்ற இரண்டு முக்கிய தேர்தல்களிலும் நாட்டு மக்கள் பதிலடி கொடுத்தார்கள். மக்களின் வாக்குப் பலத்தால் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டட்பட்டது. அதுபோல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு நாட்டு மக்கள் முடிவு கட்டுவர்.

பாதுகாப்பு சேவையில் இராணுவத்தின் அர்ப்பணிப்புக்களை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால், ராஜபக்சக்களின் சர்வாதிகார ஆட்சியில் அவர்களுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாக சேவையில் உயர் பதவிகளில் அமர்த்துவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். ராஜபக்சக்களின் இப்படியான மோசமான செயலால் இராணுவத்தினருக்கு இருக்கின்ற மரியாதை இல்லாமல் போய்விடுவோ என்ற அச்சம் எம்மத்தியில் இருக்கின்றது” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.