வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள்! தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என மஹிந்தவிடம் சங்கா, மஹேல நேரில் வலியுறுத்து
“வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்வுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.
இந்தப் பேச்சில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, லசித் மாலிங்க, சனத் ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
40 மில்லியன் டொலர்கள் செலவில் ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்கப் போவதாக அரசு றிவித்திருந்தது.
இதனையடுத்து மஹேல ஜயவர்தன உள்ளிட்ட தரப்பினர் இதற்குப் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்ததை அடுத்து நாட்டில் பெரும் பேசும் பொருளாக இந்த விடயம் காணப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளையும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களையும் நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் சந்தித்தார்.
பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு கிரிக்கெட் மைதானம் அமைக்காமல், அதனை மாணவர்களின் கல்விக்காகவும், கிராமப்புற மாணவர்களின் கிரிக்கெட் மேம்பாட்டுக்காகவும் செலவிட முடியும் என்று ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூரிய மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் இதன்போது தெரிவித்தனர்.
குறிப்பாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
வடக்கு, கிழக்கில் மிகவும் திறமையான இளைஞர்கள் இருக்கின்றனர் எனவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பாரபட்சம் இன்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர்.
வடக்கில் 26 பாடசாலைகளுக்கு ஒரு மைதானம் மாத்திரமே காணப்படுகின்றது என மஹேல ஜனவர்தன தெரிவித்தார்.
போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை நாம் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் மஹேல ஜனவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.
“வடக்கு, கிழக்கில் திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை எமக்கு உள்ளது” எனவும் மஹேல ஜயவர்தன கூறினார்.
“யாழ்ப்பாணத்திலுள்ள சென். பெற்றிக்ஸ் கல்லூரியில் ஆடுகளம் ஒன்றை அமைத்தோம். இதன் மூலம் திமையான வீரர்கள் கிடைக்கப் பெற்றனர். இதுபோன்று மேலும் பல வசதிகளை நாம் செய்துகொடுக்கும்போது திறமையான வீரர்களை தேசிய அணிக்குள் உள்வாங்க முடியும்” என்று குமார் சங்கக்கார தெரிவித்தார்.
ஹோமாகமவில் புதிதாக மைதானத்தை நிர்மாணிப்பதற்குப் பதிலாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்ய வேண்டும் எனவும், தற்போதைக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மைதானங்களின் வசதிகளை மேம்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
40 மில்லியன் டொலர் கடனைப் பெற்று 3 அல்லது 4 வீத வட்டியுடன் அதன் தவணைக் கொடுப்பனவாக 3.5 பில்லியன் ரூபா வீதம் 15 வருடங்களுக்குச் செலுத்துவதற்கு பதிலாக, அந்த நிதியில் கிரிக்கெட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தியைத் திட்டமிடுவது சிறந்தது என குமார் சங்கக்கார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பேச்சின் பின்னர் ஹோமாகமவில் 40 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்தை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை