“ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்” – புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம், வேப்பமடுவில் நேற்று (15) இடம்பெற்ற, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“நடந்து முடிந்த பொதுத்தேர்தல், புத்தளம் சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு செய்தியைக் கூறுகின்றது. பெரும்பான்மையின கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன முன்னணி ஆகியவற்றின் பின்னால், நாம் பிரிந்து நின்று அரசியல் செய்ததனாலேயே, முப்பது வருடங்களுக்கு மேலாக பிரநிதித்துவத்தை இழந்து தவித்தோம். சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பின்னடைவு அடைந்தோம். பல்வேறு அநியாயங்கள் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்டன. அனல் மின்சாரம், சீமெந்து தொழிற்சாலை, அறுவைக்காடு போன்றவைகளால் புத்தளம் பிரதேசத்தை நாசம் செய்தனர். அபிவிருத்தியிலும் பின்தள்ளப்பட்டோம். நமக்கென்று பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இல்லாததனாலேயே இந்த இழிநிலை ஏற்பட்டது.

எனவே, இதனை அடைய வேண்டுமென்ற முயற்சியில் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” நீண்டகாலமாக ஈடுபட்டது. பல்வேறு தியாகங்களைச் செய்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இதற்கு உடன்பாடு கண்டார். எல்லோரும் ஒன்றுசேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கியதனாலேயே, நாம் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது. ரணில், சஜித், மஹிந்த ஆகிய தலைவர்கள், இன்று புத்தளம் தொகுதியில் தமது பார்வையை செலுத்தும் நிலையை உருவாக்கியது நமது ஒற்றுமையே.

30 நாட்களில் உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பு, 31 வருடங்களுக்கு மேலாக இழந்திருந்த பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்துள்ளது. நாம் எந்தக் கட்சி ஆதரவாளர்களாக இருந்தாலும் சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். இறைவன் தந்த வாக்குப் பலத்தை ஒற்றுமையுடன் சரியாகப் பயன்படுத்தினால் பாரிய வெற்றிகளை ஈட்ட முடியும்.

புத்தளம் சரித்திரத்தில், கூட்டமைப்பின் உதவியினாலும் மக்களின் ஒற்றுமையினாலும் வரலாறு ஒன்றைப் படைத்துள்ள, கூட்டமைப்பின் மூலம் தெரிவான அலி சப்ரி ரஹீம், சமூக வாஞ்சை கொண்டவர். தமது சொந்தப் பணத்தில் மக்களுக்கு பணிபுரியும் நல்லுள்ளம் படைத்தவர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த மாவட்டத்தில்  தழைத்தோங்க அடிகோலியவர். இப்போது அவர் உங்கள் பலத்தினால் எம்.பியாகியுள்ளார். இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சியினரினதும் வாக்குகள், தியாகம், உழைப்பு இருந்ததனால்தான் அலி சப்ரி வெற்றி பெற்றார். அவரைப் பொறுத்தவரையில், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவமும் பண்பும் நிறைய இருக்கின்றது. நீங்கள் தொடர்ந்தும் அவரின் கரங்களைப் பலப்படுத்தி, இந்த மண்ணின் தேவைகளை பெற்றுக்கொள்ள ஒத்துழையுங்கள்” என்றார்.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் மற்றும் மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.