நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு அரசின் அசமந்த போக்கே காரணம். இதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்…

நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு அரசின் அசிரத்தைப் போக்கே காரணம். இதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள. இன்று(7) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனாத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.  இந்தியாவில் இருந்து இத்தொழிற்சாலைக்கு வருகை தந்தவர்களே காரணம் என தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு இந்தியர்கள் மூலமாகவே இத்தொற்று பரவியிருப்பின் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களை அரசு நாட்டுக்குள் எந்த அடிப்படையில் அனுமதித்தது என்பது குறித்து தெளிவு படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பும் நம் நாட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து விட்டு வீடு செல்ல அனுமதிக்கும் அரசு பிரண்டிக்ஸ் ஆடைத் தொழற்சாலைக்கு வந்த இந்திய நாட்டவர்களை இவ்வாறு ஏன் தனிமைப்படுத்த வில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.
வெளிநாடுகளில் இருந்து வரும் நமது நாட்டவர்களுக்கு செய்வதைப்போல அவர்களையும் தனிமைப்படுத்தி பீசீஆர் பரிசோதனை செய்த பின் அவர்களை நாட்டுக்குள் அனுமதித்திருந்தால் இவ்வளவு பெரிய விபரீதத்தை தடுத்திருக்கலாம்.
நமது நாட்டவர்களை மட்டும் தனிமைப்படுத்தும் அரசு இந்த இந்தியர்கள் விடயத்தில் கவனயீனமாக இருந்தமைக்கு வேறு ஏதும் விசேட காரணங்கள் உண்டா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதனை அரசு தெளிவு படுத்த வேண்டும்.
எப்படியும் 20 வது திருத்தத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்ற விடயத்தில் அரசுக்கு இருக்கும் அக்கறை நாட்டின் மீதும்  நாட்டு மக்கள் மீதும் இல்லை என்பதற்கு இதனைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும்.
இந்த விபரீதத்தினால் ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் பின்னடைந்திருக்கும் நிலையில் அரசின் இந்த கவனயீனம் கல்வியில் இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி 5ஆம் தரப் புலமைப்பரீட்சையை நடத்துவதா? இல்லையா? என்பது ஒரு புறம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற நிலை மறுபுறம். இதனை விட நாட்டின் பல பகுதிகளில் அச்சநிலை தோன்றியுள்ளது. அரச அலுவலகங்களின் பொதுமக்கள சேவை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே பொதுமக்களும் மாணவர்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பாதிப்புக்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.