கொவிட் – 19 முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட குழு யாழ் நகர் பகுதிக்கு கள விஜயம்…

அதிகரித்துவரும் கொவிட் 19 பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தற்போதைய நகர்ப்பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்வாதற்காக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரசாத் அவர்கள் தலைமையிலான குழு யாழ் நகரப் பகுதிக்கு இன்று (2) விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இக் கள விஜயத்தில் யாழ் நகரில் பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன பார்வையிடப்பட்டதுடன், காணப்படும் குறைபாடுகள் அடையாளம் செய்யப்பட்டது.

பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் தொடர்பில் அதிக தடவைகள் மாநகரசபையால் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டும் அந் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இன்றி காணப்பட்டது. எனவே நடைபாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் பணிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கடைத்தொகுதிகள் பார்வையிடப்பட்டு நடைபாதையை தடைசெய்யும் வகையில் காட்சிப்படுத்தப்படும் வியாபாரப் பொருட்கள் பொலிஸார் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

மேலும் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைய முடியாத வகையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு நிலையங்களில் விடாமல் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள் (பைக்) எவ்வித அறிவித்தலுமின்றி பொலிஸாரினால் நீதி மன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது என இன்றைய கள விஜயத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் பரிசோதகரும் குறிப்பிட்டார்.

மேலும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டது. அந்த வகையில் சுகாதார முறைப்படி உரிய முறையில் கைகளை தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பர்டுகளை விரைவில் ஏற்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு பணிக்கப்பட்டது.

யாழ் மாநகரினையும், பொது மக்களையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தற்போதைய கொவிட் தொற்று நிலைமைகளை அவதானித்து எதிர்வரும் வாரங்களில் யாழ் நகரில் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் பொது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதற்கான சந்தர்ப்பங்களை மட்டுப்படுத்தி, இருக்கமான நடைமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும், இது தொடர்பில் கௌரவ ஆளுநருடனும் கலந்துரையாடிவருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டமை விசேட அம்சமாகும்.

இன்றைய யாழ் நகர்ப்பகுதி கள விஜயத்தில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, யாழ் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதம வருமானவரிப் பரிசோதகர், வருமானவரிப் பரிசோதகர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.