தனிமைப்படுத்தல் நடவடிக்கை – நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ( 7355.53 மில்லியன்) நிதியை வழங்கியுள்ளது. திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் 19 வைரசு மீண்டும் பதிவானதன் பின்னர் இந்தக் காலப்பகுதி வரை இந்த அலுவல்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளின் அடிப்படையில் மேலும் இவ்வாறு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்ப்;பதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

சுயமாக வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக நிவாரணப் பொதிகளை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு 5000/= ரூபா நிவாரணத்தை வழங்குதல் போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூபா 5000/= நிவாரண கொடுப்பனவை வழங்குவதில் கம்பஹா மாவட்டத்திற்காக 2,721.27 மில்லியன் ரூபாவும் கொழும்பு மாவட்டத்திற்காக 2,333.60 மில்லியன் ரூபாவும் களுத்துறை மாவட்டத்திற்காக 1,310 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குருநாகல் மாவட்டத்தில் நிவாரணம் வழங்கப்படவேண்டிய குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவை வழங்குவதற்காக 469.57 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்காக வழங்கப்பட்ட தொகை 128.39 மில்லியன் ரூபாவாகும்.

இதற்கமைவாக , தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டிய குடும்பங்களுக்காக 5,000/= ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி 6.9 பில்லியன் ரூபாவாகும் (6,962.83மில்லியன்).

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்கும் வேலைத்திட்டத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் 75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்காக ஒரு மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்திற்கான இந்த செலவு 24.61 மில்லியன் ரூபாவாகும். காலி மாவட்டத்திற்காக 17.86மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்காக 15.92 மில்லியன் ரூபாவும், நுவரெலியா மாவட்டத்திற்காக 15.60 மில்லியன் ரூபா என்ற ரீதியிலும் 20 மாவட்டங்களில் சுயமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட மொத்த நிதி 336.54 மில்லியன் ரூபாவாகும்.

இதே போன்று 11 மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் அலுவல்களை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் 56.16 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.