மக்களின் அபிவிருத்திக்காகவே கூட்டத்தில் கலந்துகொண்டேன் சுகாதார நடவடிக்கைக்கும் நான் மனப்பூர்வ ஒத்துழைப்பு…

அமைச்சர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலில் எமது பிரதேச விடயங்களை முன்வைப்பதற்காக பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரி என்ற வகிபாகத்துடன் கிடைக்கப்பெற்ற அழைப்பில் நான் கலந்துகொண்டேன்.என   கோப்பாய் தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கெடுத்திருந்தமையினால் என் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத்தகவல்கள் வாயிலாக அறிகின்றேன். இந்நிலையில் நான் சுகாதார அதிகாரிகள் வாயிலாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டேன்.
அடிப்படையில் கூட்டத்தில் நான் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். எனினும் சுகாதார ரீதியிலான பரிந்துரைகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் நான் முழுமையாக ஒத்துழைக்கக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
என்னைத் தனிமைப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ சிபாரிசுகள் எதுவும் கிடைக்கப்பெறாத போதும் நான் என்னால் எவருக்கும் தற்சமயம் கூட பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உரிய மருத்துவப் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில் அதி கவனத்திற்கும் சுயதனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்திக்கொண்டுள்ளேன். இந் நிலையில் தொலைபேசி வாயிலாகவே வீட்டில் இருந்தவாறு பணியாற்றுகின்றேன். சபையின் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பொறுப்பு, ஏராளமான சந்திப்புக்கள், கூட்டங்கள், அபிவிருத்திவேலைகள் இக் காலகட்டத்தில் முன்னுள்ளபோதும் இயன்றவரை  பொதுமக்கள் சந்திப்புக்களை நான்  தவிர்க்கின்றேன்;.

தொலைபேசி வாயிலாகவே அதிக கடமைகளை ஆற்றுகின்றேன். எனவே சுகநலம் விசாரிப்பதற்காக அன்றி அவசர கருமங்களின் நிமிர்த்தம் என்னுடைய கையடக்கத்தொலைபேசியான 0776569959, பிரத்தியேக அலுவலகத் தொலைபேசியான 0214339959 மற்றும் பாவனையில் உள்ள  0215619959, 0115249959 மற்றும் மின்னஞ்சல்thiagarajanirosh@gmail.com  முகவரி வாயிலாகவும் மக்கள் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

மேலும் அன்றைய கூட்டத்தில் பங்கேற்றமை காரணமாக அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளை என்னால் முன்வைக்க முடிந்தது. குறிப்பாக எமது சபை உள்ளிட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்ற சிறுகுளங்களை புனரமைத்து நிலத்தடி நீர்வளத்தினை பாதுகாப்பது தொடர்பாகவும் பிரதேசத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மின்குமிழ்களை திருத்தம் செய்வதற்கான பொறிமுறை தொடர்பிலும் உரிய தரப்புக்களுடன் பகிரங்கமாக என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கான தீர்வு பற்றி ஆராயப்பட்டு முதற்கட்ட முயற்சிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமையும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நடைபெறும் சந்திப்புக்களை நாம் பயன்படுத்தவேண்டிய அவசியம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.