தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் அக்கறையாகவுள்ளது இந்தியா

தமிழினத்தின் விடுதலையிலும் தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பிலும் இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளனர். மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட விரும்புகின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சீனாவின் தலையீடுகள், அதற்கு எதிரான நாடுகளின் தலையீடுகள், இந்தியாவின் உரித்து இலங்கையின் பாதுகாப்பில் தங்கியுள்ளது என்பதில் அந்த நாடுகள் அக்கறையாகவுள்ளன.

இலங்கையின் பாதுகாப்பு, குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களின் பாதுகாப்பு, இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கும், இருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் கருதுவதால், கூடிய அக்கறை செலுத்துவதாக செய்திகள் மூலம் அறியமுடிகின்றது.

ஆனபடியால், தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஏற்கனவே அவ்வாறு பல விடயங்களைப் பேசக்கூடியதாக இருந்திருக்கின்றது. அப்படி மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட விரும்புகின்றோம்.

அது இந்திய அரசின் ஒரு தேவைப்பாடாகவும், எங்களுக்கு அதிக தேவைப்பாடாகவும், ஒரு நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கின்றது. எனவே, அவ்வாறான பேச்சு இடம்பெற வேண்டும் என நாங்களும் விரும்புகின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.