சிறையில் : 110 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 3ஆவது அலையின் தாக்கம் அதிரித்து வரும் நிலையில் சிறைச்சாலைகள் புதிய கொத்தணிகளாக மாறி வருவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதுவரை வெலிக்கடை, போகம்பர மற்றும் மாத்தற சிறைகளில் இதுவரை 108 கைதிகள் உள்ளிட்ட 110 பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சிறை நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையர் சந்தனா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று உறுதியான கைதிகளின் மொத்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண் கைதிகள் 89 பேரும், ஆண் கைதிகள் 11 பேரும் உள்ளடங்குகின்றனர். இதுதவிர சிறைப் பாதுகாப்பு விவரங்களுக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் விசேட பணி அதிகாரி ஒருவருக்கும், சமையல்கார ஊழியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, போகம்பர சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 110 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதேவேளை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையானது சிறைச்சாலைக் கொத்தணிகளை உருவாக்குமாக இருந்தால் மற்றொரு பேரவலமாக மாறக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறைகளிலுள்ள பிணை வழங்கக் கூடியதான கைதிகளுக்குப் பிணை வழங்குமாறும், சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.