தீபாவளியை முன்னிட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியாவில் விசேட வழிபாடு …

இந்துக்களின் சிறப்பு வாய்ந்த தினங்களில் ஒன்றாகிய தீபாவளி தினத்தை முன்னிட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு வி.என்.சர்மா தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

விநாயகப் பெருமானுக்கு விசேட அபிடேகம் இடம்பெற்று மேள தாள வாத்தியங்கள் முழங்க தீப ஆராதனைகளுடன் வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்த அடியார்கள் புத்தாடைகள் அணிந்து வந்து விநாயகப் பெருமானை வழிபட்டு அவரது அருள் ஆசியினைப் பெற்றதுடன், இரு கரம் கூப்பி தீபாவளி வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதத்தின் நிறைவு நாள் இன்றாகும். 21 நாட்கள் நிவர்த்தி வைத்து விரதம் அனுஸ்டித்த அடியார்கள் இன்று தமது விரதத்தை நிறைவு செய்து கௌரி காப்பு கட்டும் நிகழ்வும் ஆலயங்களில் சுகாதார நடைமுறைகனுளுக்கு அமைவாக இடம்பெற்றது.

வவுனியா குட்செட் கருமாரி அம்மன் ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் தலைமையிலும், கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு தலைமையில் கௌரி விரதப் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.

அத்துடன், ஆலயத்தின் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் அதிகளவிலான பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையிலும் ஆலய வாசல்களில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.