கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 14 பேர் புதிய தொற்றாளர்களாக இன்று (திங்கட்கிழமை) காலை உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 68 நபர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனையின்போது 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருகோவில் பிரதேசத்தில ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 86 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 88 பேரும் திருகோணமலையில் 16 பேரும் கல்முனையில் 86 பேரும் அம்பாறையில் 10 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும் சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.