மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீடு வெற்றி…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிற்கான விசேட சபை அமர்வு இன்றைய தினம் (15) மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இவ் விசேட அமர்வில் மாநகர முதல்வரினால் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த 03ம் திகதி நடைபெற்ற பாதீட்டு அமர்வின் போது பல உறுப்பினர்களினால் புதிய முன்மொழிவுகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டமை காரணமாக அவ் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய முன்மொழிவுகளையும், திருத்தங்களையும் உள்வாங்கிய வகையில் திருத்தப்பட்ட பாதீடு இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதன் போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.
பின்னர் வரவு செலவு அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 02 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 01 உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 05 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 02 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 உறுப்பினர், சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவர் அடங்கலாக 18 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதன்படி 38 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் மேலதிக 02 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது. சபை நிறைவின் பின்னர் சபைக்கு வெளியே பாதீட்டு எதிராக வாக்களித்த உறுப்பினர்களினால் சிறு குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டு பின்னர் சுமூக நிலைக்கு வந்தது.
இவ்வமர்வினைப் பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை