மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்கையாக கைது செய்யப்பட்டிருக்கின்றவர்களை விடுதலை செய்யுமாறு இந்திய தரப்பு கோரியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும் செயற்பாடுகளை நிறுத்தி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு எதிர்கால இலங்கை – இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதரப் பிரச்சினை ஏற்படாமல் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்..

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.