முஸ்லிம் மக்களுடைய உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறல்! ஜனாஸாக்கள் எரிப்பதற்கு எதிராக தமிழ்த் கூட்டமைப்பு கண்டனம்
முஸ்லிம் மக்கள் தங்கள் மதக் கொள்கைகளுக்கு அமைய இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான உரிமை மீறல்கள் தொடரக் கூடாது எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இந்தத் தீா்மானத்தை எடுத்து அறிக்கையூடாக அறிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“எங்களது சகோதார முஸ்லிம் சமூகத்தில் இறந்தவா்களின் உடல்களை அவா்களின் நம்பிக்கையின் பிரகாரம் தாமதமின்றி அடக்கம் செய்வது தொடர்பில் விரைவில் ஒரு முடிவுக்கு வருவது கட்டாயமாகும்.
கொரோனாவால் இறந்தவா்களின் உடல்களை முறைப்படி அடக்கம் செய்வதால் கொரோனா பரவாது என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் முஸ்லிம் தலைவர்களுடன் இது குறித்துக் கலந்துரையாடுவதும், மேலும் தாமதமின்றி ஒரு நீதியானதும் நியாயமானதுமான முடிவுக்கு வருவதும் அரசின் கடமையாகும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்” – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை