(நேர்காணல் )சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதனால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்தலாம்-கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன்

(நேர்கண்டவர் :- பாக்கியராஜா மோகனதாஸ்)

 

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில், ஆளணி வளங்களே பிரதான பற்றாக்குறையாகவுள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருக்கின்றோம். சுகாதார ஊழியர்களை முதலில் பாதுகாப்பதன் பிற்பாடே சேவைகளை செய்ய முடியும். கொரோனா தொற்றுள்ள சாதாரண நபர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதி இருப்பதுடன் அதி தீவிர நிலையிலுள்ளவர்களுக்கான சிகிச்சை வசதிகள் இல்லை என்றே சொல்ல வேண்டும் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன்; அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு,

01) கேள்வி :- கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ற ரீதியில், கொரோனா தொடர்பான நிர்வாக கட்டமைப்பு எவ்வாறுள்ளது ?

பதில் :- திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய நான்கு பிராந்தியங்களாக உள்ளடக்கி இணைந்ததே கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையாகும். ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியப் பணிப்பாளர் இருக்கின்றார். நோய்கள் வரும் முன் தடுக்கும் பொதுச் சுகாதாரம், நோய் வந்த பிறகு சிகிச்சையளித்து குணப்படுத்துதல் ஆகியவையே சுகாதார சேவைகள் பணிமனையின் கட்டமைப்பாகும். அந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் நிலை, இரண்டாம் நிலை சிகிச்சையளித்தல் வசதி மாகாணத் திணைக்களத்தினுள்ளும் மூன்றாம் நிலை சிகிச்சைக் கட்டமைப்பு, மத்திய அரசாங்கத்தின் கீழும் காணப்படுகின்றது.

கொரோனா, ஒரு தொற்றுநோய் என்ற ரீதியில் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதானமாக மாகாணத் திணைக்களமும் அதன் கீழ் கிழக்கிலுள்ள 04 பிராந்திய சுகாதார பணிமனைகளும் அதன் கீழுள்ள 46 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் என்பனவும் காணப்படுகின்றது.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இருக்கின்ற சனத்தொகைக்கு ஏற்ப பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவும் அதே வேளை தாய், சேய் நலன் சம்பந்தமான பொதுச் சுகாதார மாதுக்கள் பிரிவும் காணப்படுகின்றது. சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் கொரோனாவின் ஆரம்பக்கட்ட தடுப்பு நடவடிக்கைகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றைத் தடுக்கின்ற பல முறைமைகள் காணப்படுகின்ற போதிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி தொற்று சம்பந்தமான பூரண நடவடிக்கைகளை ஒவ்வொரு தனி நபரும் தயார்ப்படுத்துகின்ற
நடவடிக்கைகளை, கிழக்கு மாகாணத்திற்குள் கொரொனா தொற்றுப் பரவல் வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அதன் பிற்பாடு கிழக்கு மாகாணத்திற்குள் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து, அதில் ஒரு பகுதியாக தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கும் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் தொடர்ச்சியாக எழுந்தமான பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.

02) கேள்வி :- கொரோனா தொடர்பாக கிழக்கு மாகணத்திலுள்ள அரச நிர்வாகங்களுடன் எவ்வாறான தொடர்புள்ளது ?

பதில் :- கிழக்கு ஆளுனரின் பிரதம செயலாளரின் மேற்பார்வையில் மாகாண மட்டத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதே வேளை மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளரின் தலைமையில் கொரோனா விசேட செயலணியை உருவாக்கி அடிக்கடி மாவட்ட செயலாளருடன் சந்தித்து மாவட்டத்தில் செய்யப்படுகின்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்து அதற்கு மேலதிகமாக என்ன செய்யலாம் என தொழிநுட்ப முடிவுகளை எடுக்கின்றோம்.

அதே வேளை கிழக்கிற்குள்ளும் ஏனைய வெளி மாகாண, மாவட்டத்திற்குள்ளும் இருந்து வருபவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றோம். உதாரணமாக மட்டக்களப்பிற்கு வருபவர்களை பொலிஸார், இராணுவத்தினர் சுகாதாரத் துறையினர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களுடன் இணைந்து எழுந்தமானமாக பதிவு செய்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதோடு, மாவட்டத்தில் இருக்கின்ற கிராம சேவையாளர் குழு முறையாக இயங்குகின்றதா ? என்னென்ன செய்ய வேண்டும் என்ற கடமையினையும் தயாரித்துக் கொடுத்து நடவடிக்கைகளை ஒருங்கமைத்துக் கொண்டு செயற்படுகிறோம்.

03) கேள்வி :- கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள் ?

பதில் :- கொரோனா, சுகாதாரத் துறைக்கு மாத்திரமின்றி அனைவருக்கும் பொறுப்பானது. தற்போதைய நிலையில் சுகாதாரத் துறையினர், பொலிஸார், இராணுவம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றோடு சேர்ந்து ஒரு குழுவாக இயங்கி செயற்படுகிறோம். ஆகவே ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா செயலணிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள செயலணியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. செயலணி ஊடாக வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தேடிக்கண்டுபிடித்து பி.சீ.ஆர் பரிசோதனைகள் செய்கின்றோம். அதே வேளை உலகளாவிய ரீதியிலுள்ள முக்கிய கொள்ளை நோய் என்ற படியினால், இலங்கையில் 1926 ஆம் ஆண்டில் இருந்து அமுல்ப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், தொற்றுள்ளவர்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தால் நோய் அரும்பு கால 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த வேண்டிய கடப்பாடுள்ளதனால் வெளியிலும் வீட்டிலும் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் மற்றவர்களிடமிருந்தும் சுய தனிமைப்படுத்துகின்றோம். ஆகவே பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணும் பட்சத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கி உரிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றோம். ஆகவே கொரோனா தொற்றாளரிடமிருந்து மேலதிகமாக ஏனையோருக்கு பரவாமல் இருக்கின்ற செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

தொற்றுப் பரவல் ஏற்பட்டதன் பிற்பாடு மற்றவர்களுக்கு பரவாது இருப்பதற்காக பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். உதாரணத்திற்கு மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி மற்றும் அக்கறைப்பற்று ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையுள்ள தொற்றாளர்கள் காணப்பட்டதனால் எனையோருக்கும் பரவாமல் தடுப்பதற்காக பொலிஸாரினதும் முப்படையினரினதும் உதவியுடன் இணைந்து அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட பகுதியை முடக்கியிருந்தோம். அதே வேளை தொடர்ச்சியாக மக்களை தெளிவுபடுத்தி, ஆலோசனை அறிவுரைகள் வழங்கி வழிப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம்.

04) கேள்வி :- கிழக்கில், கொரோனா தொற்று ஏற்படுமிடத்து சிகிச்சை நிலையங்களாக எவ் வைத்தியசாலைகள் செயற்படுகின்றன ?

பதில் :- விசேடமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை உட்பட கிழக்கில் ஒன்பது வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டு இற்றைவரை இயங்கி வருகிறது.

திருகோணமலையில் ஈச்சிலம்பற்று, குச்சவெளி போன்றவையும் மட்டக்களப்பில் காத்தான்குடி, கரடியனாறு மற்றும் பெரியகல்லாறு வைத்தியசாலையும் கல்முனைப் பிராந்தியத்தில் பாலமுனை, மருதமுனை வைத்தியசாலையும் அம்பாறை பிராந்தியத்தில் பதியத்தலாவ மற்றும் தமன ஆகியவற்றை கொரோனா சிகிச்சைக்குரிய வைத்தியசாலைகளாக மாற்றியுள்ளோம். தொற்றுள்ளவர்கள் ஆனால் குணங்குறிகள் அற்றவர்களை பராமரிக்கின்ற வைத்தியசாலைகளாக இவ் வைத்தியசாலைகளை பயன்படுத்தி பராமரித்து வருகின்றோம்.

   05) கேள்வி :- கொரோனா தொடர்பாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதான நோக்கம் ?

பதில் :- கொரோனா தொற்றிலிருந்து முதலாவதாக சுகாதார ஊழியரைப் பாதுகாத்தல் வேண்டும். அவ்வாறு பாதுகாப்பதன் மூலமே நீண்டநாள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சுகாதார ஊழியர்களை பயன்படுத்த முடியும். ஆகவே சுகாதார ஊழியர்களுக்கான இயன்றளவு பாதுகாப்பு முறைகளை வலிந்து இறுக்கிக்கொண்டு வருகின்றோம்.

06) கேள்வி :- பொதுமக்கள் பொது வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த முடிகிறதா ?

பதில் :- பொதுமக்கள் மத்தியில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கெதிராக தற்போது நிலையான சட்ட நடவடிக்கைகளை இறுதியாக பிரயோகிக்கின்றோம். ஆங்காங்கே ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும், மக்களை வலிந்தாவது வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற சட்டதிட்டங்களை பொலிஸாரினதும் படையினரதும் உதவிகளை பெற்று செயற்படுத்தி வருகின்றோம்.

07) கேள்வி :- கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளீர்களா ?

பதில் :- அபிவிருத்தியடைந்து வளர்ந்த நாடுகளில் தொற்றினை கட்டுப்படுத்தும் வீதம் குறைவாக இருந்தாலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொற்றின் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது. தொற்று ஒரு நாட்டில் ஏற்பட்டால் சுமார் 1000 தொற்றாளர்கள் உருவாகுவார்கள். ஆனால் தொற்று ஏற்படும் காலத்தை நீடிப்பதே வெற்றியின் இரகசியம். ஒரு மாதத்திற்குள் 1000 நபர்களுக்கு தொற்று ஏற்படுவதா மாறாக மூன்று மாதத்திற்குள் 1000 பேருக்கு தொற்று ஏற்படுவதா ? பெரிய விடயம் என்று சிந்திக்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் 1000 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படும்போதே தொற்றாளர்களை எதிர்நோக்கி அதற்குரிய செயற்பாடுகளை செய்ய முடியும். இதுதான் பொதுச் சுகாதாரத்தினுடைய பிரதான தடுப்பு முறைமையாகும்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதியுள்ளதென்றால், ஒரு மாதத்திற்குள் 2000 தொற்றாளர்கள் அதிகரிக்கும்போது வைத்தியசாலைகளினால் சிகிச்சையளிக்க முடியாத நிலைமை காணப்படும். அதே எண்ணிக்கையானவர்கள் மூன்று மாத காலத்திற்குள் அனுமதிக்கும் பட்சத்தில் வைத்தியசாலைகளால்
பராமரிக்க முடியும் என்ற ரீதியில் ஆயத்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றோம்.

கொரோனா தொற்றின் தாக்க வீரியம் கூடும்போது குறிப்பாக நூற்றில் பத்து பேருக்கு தீவிர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறான வேளையில் பொது வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலை தவிர வேறு எந்த வைத்தியசாலையிலும் போதுமான வசதிகள் இல்லை. ஆகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்துவதன் மூலமே
மட்டுப்பட்ட சேவையினை உறுதிப்படுத்தி தீவிர சிகிச்சை தேவைப்படுகின்ற எண்ணிக்கையினை குறைக்க முடியும். வெளியில் நடமாடும் தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பெரும் விமர்சனத்திற்கு மத்தியிலேயே மேற்கொண்டு வருகின்றோம்.

08) கேள்வி :- தொற்றாளர்கள் அதிகரிக்கும் நிலையில் ஒன்பது வைத்தியசாலைகள் தவிர வேறு ஏதேனும் வைத்தியசாலைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனவா ?

பதில் :- ஒன்பது வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்படுவதனால் வேறு வைத்தியசாலைகளின் தேவைகள் ஏற்படவில்லை. திடீரென்று அதிகரிக்கும்போது தயார்ப்படுத்தல் என்ற கதை வரக்கூடாது என்ற நோக்கில் இருக்கின்ற வைத்தியசாலைகளையே கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற வேண்டி வரும்.

09) கேள்வி :- கிழக்கிலுள்ள கொரோனா சிகிச்சை நிலைய கட்டமைப்பை கூற முடியுமா ?

பதில் :- மட்டக்களப்பிலுள்ள காத்தான்குடி வைத்தியசாலை பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கரடியனாறு வைத்தியசாலை ஆண்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்திலுள்ள பாலமுனை வைத்தியசாலை ஆண்களுக்கென்றும் மருதமுனை வைத்தியசாலை பெண்களுக்கும் சிறுவர்களுக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிராந்தியத்திலுள்ள ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆண்களுக்காகவும் கொரோனா தொற்றுக்கூடும்போது குச்சவெளி வைத்தியசாலையினை பெண்களுக்காகவும் மாற்றவுள்ளோம்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா நிலையிலுள்ள உடல்நலம் குன்றியவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்
சிகிச்சையளிக்க, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் கீழ் ஆயத்தப்படுத்தியுள்ளோம். ஆகவே ஏற்கனவே திட்டமிட்டு முறையாக எல்லாவற்றையும் செய்துள்ளோம்.

10) கேள்வி :- கிழக்கிலுள்ள கொரோனா சிகிச்சைக்குரிய வைத்தியசாலைகளில், வளங்கள் போதுமானதாக உள்ளதா ?

பதில் :- கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில், ஆளணி வளங்களே பிரதான பற்றாக்குறையாகவுள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருக்கின்றோம். சுகாதார ஊழியர்களை முதலில் பாதுகாப்பதன் பிற்பாடே சேவைகளை செய்ய முடியும். கொரோனா தொற்றுள்ள சாதாரண நபர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதி இருப்பதுடன் அதி தீவிர நிலையிலுள்ளவர்களுக்கான சிகிச்சை வசதிகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

11) கேள்வி :- கொரோனா என்றாலே அச்சம், பயம் என்றாலே கொரோனா என்ற நிலையில் தொற்றாளர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா ?

பதில் :- வைத்தியசாலை என்பதை விட ஓய்வெடுக்கும் இடமாகவே சிகிச்சை நிலையத்தை மாற்றியுள்ளோம். அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் செய்திருக்கின்றோம். வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் கமரா மூலம் 24 மணி நேரமும் கவனித்துக்கொண்டிருப்பதால், ஏதாவது சேவைகள் தேவைப்படும் பட்சத்தில் உளநல நிபுணர்களின் உதவியை நாடுகின்றோம். உடல் நலம் மட்டுமல்ல மனநலம், சமூகம் எல்லாப் பகுதியும் இணைந்ததே சுகாதாரமாகும்.

12) கேள்வி :- கொரோனா தொற்றாளருடன் சகஜமாக பழக முடியுமா ?

பதில் :- கொரோனா நோயாளியாக இருந்தாலோ திடீரென்று எதிர்பாரத விதமாக சந்தித்தாலோ தொற்றுள்ளவர் என்று தெரியாமலிருந்தாலோ குறிப்பிட்ட சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிந்து தொடாமல் கதைக்கலாம். கொரோனா என்பது சாதாரண நோய், ஆனால் நோயின் தாக்கமும் தொற்றுகின்ற வீதமும் அதிகம்.

கொரோனா எங்களுடைய செயற்பாட்டினாலோ பாவத்தாலோ எந்தவித பிரச்சினையினாலோ வந்தது அல்ல. அந்தக் காலத்தில் குஷ்ட, கச நோயாளர்களை பார்ப்பது போன்று கொரோனா தொற்றுள்ளவர்களை பார்ப்பது பிழையாகும். இன்றைக்கு, நாளைக்கு நானோ நீங்களோ கொரோனா நோயாளியாக மாறலாம். முறையாக கண்காணித்து பராமரித்தால் குணமடையக்கூடியது. சாதாரண தடிமல் இருமல் தொற்றுதான். ஆனால் தொற்றின் தாக்கம் அதிகம்.

பி.சி.ஆர், அன்டிஜென் பரிசோதனை செய்ததன் பின்னரே எனக்கோ உங்களுக்கோ கொரோனா தொற்றுள்ளது என்று அறியமுடியும். நூற்றுக்கு 85 வீதமானவர்களுக்கு குணங்குறிகள் காட்டுவதில்லை. ஆகவே மக்கள் எல்லோரும் எங்களை சுற்றி கிருமி இருக்கின்றதென்ற நிலையிலேயே இருக்க வேண்டும். ஆகவே கிருமி எங்களை தொற்றாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

13) கேள்வி :- கொரோனா தொடர்பாக வைத்தியசாலைகளில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது ?

பதில் :- கொரோனா எல்லா இடங்களிலும் பரவி வரும் வேளையில் ஏதோ ஒரு வகையில் தொற்று ஏற்படலாம். தற்போதைய நிலையில் காய்ச்சல் என்று வந்தால், கொரோனாவாக இருக்கலாம் என்று ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் வெவ்வேறாக வகைப்படுத்தும் செயற்பாடுகள் இருக்கின்றது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் கட்டாயமாக வைத்தியசாலைகளை நாட வேண்டும். கொரோனாவின் குணங்குறிகள் காட்டுபவர்களிடமிருந்து ஏனையோருக்கு தொற்றுப் பரவல் வீதம் அதிகமாக இருக்கும். ஆகவே உங்களிலிருந்து மற்றவர்களை பாதுகாக்க, நோயின் ஆரம்பக் கட்டப் பிரச்சினையிலிருந்து விடுபட உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்.

தொற்று இருக்குமென்று அடையாளம் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு அனுப்பி சுகப்படுத்தும் வேளை ஏனையவர்களையும் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். ஆகவே எல்லோரையும் பாதுகாக்கின்ற பொறிமுறையை சிந்திக்க வேண்டுமே தவிர சுயநலமாக இருக்காது பொதுநலமாக இருக்க வேண்டும்.

14) கேள்வி :- கொரோனாவினால் கிழக்கில் முதல் மரணம் சம்மாந்துறையில் நிகழ்ந்துள்ள நிலையில் ஏதேனும் தீவிர ஆயத்த நிலைப்பாடுகள் உள்ளனவா ?

பதில் :- கொரோனா தொற்றுள்ளவர்கள் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. இது நானோ எனக்கு கீழ் உள்ளவர்களோ தீர்மானிப்பதல்ல. தேசிய ரீதியில் அதற்கான நடைமுறை இருக்கிறது.

ஆகவே சம்மாந்துறையில் கொரோனாவால் மரணமானவர் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பும் வழியில் மரணமடைந்துள்ளார். அதனுடைய மரண அறிக்கையினை இலங்கையில் இருக்கின்ற தொற்று நோயியல் பிரிவின் ஆலோசனையின் பிரகாரமும் சட்ட வைத்திய வல்லுனர்களின் பிரகாரமும் எடுக்கப்படும். இதுவரை 5 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 5 மரணங்களில் 4 மரணங்கள் கல்முனை பிராந்தியத்திலும், ஒரு மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியிலும் பதிவாகியுள்ளது.

15) கேள்வி :- கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு கூற விழைவது ?

பதில் :- தொற்றுநோய் என்பது எங்களுக்கு புதிதான விடயமல்ல. வீட்டில் அம்மை நோய்(அம்மாள்) வந்தால் வீ்ட்டு வாசல் படிக்கு நுழைய முன் உள்ள நுழைவாயிலில் வேப்பம் இலை தொங்கவிட்டிருப்பார்கள். அதனை பார்ப்பவர்கள் வீட்டிற்குள் வரவும் வீட்டை விட்டு வெளியவும் போகமாட்டார்கள்.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் எல்லோரிடத்திலும் வெளியில் காட்டப்படாது, யாருக்கும் தொற்று இருக்கலாம். தொற்று எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிடின் மற்றவர்களுக்கு பரவல் மூலம் தொற்றை ஏற்படுத்தலாம். வீட்டிற்கு வெளியேயும் வீட்டிற்கு உள்ளேயும் சுகாதார வழிமுறைகளை
கடைப்பிடிப்பதனால் மாத்திரமே கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்தலாம்.

அதற்குரிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன. அது இலங்கைக்கு வருவதற்கு சில காலங்கள் செல்லும். இலங்கைக்கு வந்தாலும் நூற்றுக்கு நூறு வீதம் உடனடியாக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களும் மிகவும் குறைவு. ஆகவே வருமுன் காப்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

16) கேள்வி :- கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில பிரதேசங்களில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த அப்பிரதேசத்தை முடக்க முடியாதா ? 
பதில் :- அதிமேதகு ஜனாதிபதி குறிப்பிடுவது போல புதிய சாதாரண வாழ்க்கைக்குள் (New Normal life ) எல்லோரும் கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும். கொரோனாவை மையப்படுத்தி எல்லாவற்றையும் தொடர்ச்சியாக முடக்க முடியாது. ஒரு வீதியை, பிரதேசத்தை முடக்கலாம். ஆனால் ஒரு நகரையோ பிராந்தியத்தையோ முடக்க முடியாது. எவ்வளவு காலத்துக்கு முடக்கப் போகின்றோம் ?முடக்கும்போது மக்களின் தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யப்படும் என்ற கேள்விகளும் தொக்கி நிற்கின்றன. ஆகவே இவ்வாறாக தொடர்ச்சியாக முடக்குவதனால் நிறைய பி்ரச்சினைகள் இருக்கிறது.

ஒரே நடைமுறையை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடைமுறைப்படுத்த முடியாது. தொடர்ச்சியாக படிநிலைத் தேவைக்கேற்ப முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. தற்போது அக்கரைப்பற்று, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் செய்து வருகின்றோம். தொற்றின் வீதம் குறைந்துகொண்டு வருகிறது. பி.சி.ஆர் பரிசோதனை செய்து தொற்றில்லாத பிரதேசத்தை கட்டம் கட்டமாக விடுவித்து இறுதியில் முடக்கத்தை நீக்கி விடுவோம்.

  17) கேள்வி :- கிழக்கில் கொரோனா தொற்றுப் பரவல் தற்போது எவ்வாறான நிலையிலுள்ளது ?

பதில் :- பேலியகொட மீன் சந்தைத் கொத்தணியைத் தொடர்ந்து ஆங்காங்கே கிழக்கில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. ஆரம்பத்திலே கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டு சுய தனிமைப்படுத்துவதன் மூலம் அவரிடமிருந்து ஏனையவர்களுக்கு தொற்றுகின்ற சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கின்றோம் என்ற ரீதியில் தொற்றை மட்டுப்படுத்துகின்றோம். மட்டுப்படுத்தும் வேலைகளை சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

  18) கேள்வி :- தொற்று ஏற்பட்டவருக்கு மீண்டும் கொரோனா ஏற்படுமா ?

பதில் :- தடிமல், காய்ச்சல் வந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் வரலாம். கொரோனா, புதிய வகை நோய். இதுவரைக்கும் கொரோனா பற்றி விஞ்ஞான ரீதியிலும் முழுமையாக விளக்கமில்லை. ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் தொற்று மீண்டும் வராது. ஆனால் விஞ்ஞானத்தில் நூற்றுக்கு நூறு வீதம் எதையும் கூற முடியாது. நோய் எதிர்ப்புச்சக்தி உட்பட பல காரணங்களால் குறைந்த நிலையில் மீண்டும் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக வரும் என்று கூற முடியாது.

19) கேள்வி :- கிழக்கில் பி.சி.ஆர் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரம்தானே முன்னெடுக்கப்படுகிறது ?

பதில் :- பி.சி.ஆர் பரிசோதனைக்குரிய ஆய்வுகூடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இருக்கின்றது. ஒரு நாளைக்கு நானூறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கிழக்குக்கான முழுப் பரிசோதனைகளும் போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இடம்பெறுகிறது.

மட்டு. போதனா வைத்தியசாலையிலுள்ள ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் முழு மூச்சாக உழைத்துக்கொண்டிருப்பதன் பிரகாரமே குறிப்பிட்ட எண்ணிக்கையான சோதனைகளை செய்யக்கூடியதாகவுள்ளது. அதே வேளை மத்திய அரசாங்கம் அன்டிஜென் செய்யக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தந்துள்ளது.

20) கேள்வி :- கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்ற ரீதியில் கொரோனா பரவலினால், தங்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்கள், சந்தித்த சவால்கள் ?

பதில் :- கிழக்கில் கொரோனா பரவினால் என்ன நடக்குமென்று தெரிந்துதான், பரவ முன்னரே மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையினை தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை தூரநோக்கில் கூறியிருந்தேன். ஆனால் காழ்ப்புணரச்சியுள் ளவர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டேன். இருந்தும் எதையும் பொருட்படுத்தவில்லை.

கிழக்கிற்குள் வெளி மாவட்ட கொரோனா நோயாளர்களை கொண்டு வருகின்றார்கள் என்று விமர்சனம் தெரிவித்தவர்களுக்கு இன்றைய கொரோனா நிலைப்பாடு புரியும் என நினைக்கின்றேன்.

அன்று இவ்வாறு நடக்கும் என்று எண்ணியவை இப்போது இடம்பெறுகின்றது. அதற்காகவே ஒன்றல்ல ஒன்பது வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியமைத்துள்ளோம். விசேடமாக இன்று கல்முனையில் தொற்றுக்குள்ளானவர்கள் வேற எந்த மாகாண வைத்தியசாலைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. கிழக்கு மாகாண மாவட்டத்திற்குள்ளே நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளேன்.

21) கேள்வி :- கொரோனா தொடர்பாக எவ்வாறான உடனடி வசதி வாய்ப்புகள் தேவைப்படுகிறது ?

பதில் :- வசதி வாய்ப்புகளை ஒரு நாளுக்குள் ஏற்படுத்த முடியாது. வசதியை விட எங்களுக்கு மக்களின் மனநிலை, நடத்தை மாற வேண்டும் கிழக்கு மாகாண மக்கள் நேர் மறையான மனப்பாங்குகளை கொண்டிருக்க வேண்டும். எதிர்மறையான மனப்பாங்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தாக்கம் செலுத்தும்போது கட்டுப்படுத்தல் வீரியம் மட்டுப்படுத்தப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.