சாய்ந்தமருது கலாச்சார மண்டப நிர்மாண விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிடுங்கள் : சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபை கோரிக்கை…
நூருள் ஹுதா உமர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மஹிந்த அரசில் கலாச்சார அமைச்சராக இருந்த நந்தமித்ர ஏக்கநாயக்க அவர்களினால் சாய்ந்தமருது கலைஞர்களின் தேவையறிந்து கலாச்சார மண்டபம் ஒன்றை உருவாக்க வேண்டி ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் பத்து வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த கலாச்சார மண்டப நிர்மாணம் முடிவு பெறவில்லை என சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாச்சார அதிகாரசபை சார்பில் கலந்து கொண்ட அதிகாரசபை செயலாளர் கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ், பொருளாளர் கலைஞர் அஸ்வான் சக்கப் மௌலானா, நிர்வாக உறுப்பினர் கலாபூஷணம், கலாசூரி, சாமஸ்ரீ முதுகலைஞர் வெண்ணிலா ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், கடந்த நல்லாட்சி அரசில் கலாச்சார அமைச்சராக இருந்த இப்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து பல தடவைகள் இது தொடர்பில் பேசினோம். மட்டுமின்றி அம்பாறை மாவட்டத்தில் இருந்த நல்லாட்சி அரசின் அமைச்சர்கள் பலரிடமும் இவற்றை பற்றி எடுத்துரைத்தோம். ஆனால் நல்லாட்சியில் எதுவும் நடக்க வில்லை.
மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் காலத்தில் போடப்பட்ட அத்திவாரம் பத்துவருடம் கழித்தும் பயந்தரவில்லை என்பதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த பிராந்திய கலைஞர்கள் பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றவர்கள். இவர்களினால் தொடர்ந்தும் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இங்குள்ள கலைஞர்கள் மற்றும் கலை அமைப்புக்களை ஒன்றுதிரட்டி இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர், கிழக்கு ஆளுநர், கலாச்சார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றை கையளிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை