அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்!

2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. மிரிஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கைக் கடலோரப் பாதுகாப்புத் தலைமையகத்தை உயர்ரக பயிற்சிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் கடலோரப் பாதுகாப்பு படையினரின் தங்குமிட வசதிகளுக்காகவும் கட்டிடத்தை நிர்மாணித்தல்

இலங்கைக் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிகளை மிகவும் திறம்படவும் வினைத்திறனாகவும் மேற்கொண்;டு செல்வதற்குத் தேவையான வசதிகளுடன் கூடிய உயர்ரக பயிற்சிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 04 மாடிக் கட்டிடமும், கடமையிலும் பயிற்சிகளிலும் ஈடுபடும் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிட வசதிகளுடன் கூடிய 05 மாடிக் கட்டிடமும் நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், குறித்த காணி இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதால் நிர்மாணப் பணிகள் தடைப்பட்டுள்ளது. ஆனாலும், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையால் குறித்த காணியில் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படாததுடன், இலங்கைக் கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக குறித்த கட்டிடத்தை துரிதமாக நிர்மாணிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த கட்டிடங்கள் இரண்டின் கட்டுமானப் பணிகளை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.

02. அடையாளங் காணப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி கொரியா ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்திப் பங்களிப்பு நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக கொரியக் குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான செயற்பாட்டுக் கட்டமைப்பு உடன்பாடு

இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பினரின் பரஸ்பர உடன்பாடுகளுக்கமைய எட்டப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு கொரிய குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான செயற்பாட்டுக் கட்டமைப்பு உடன்பாட்டுக்கு கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டில் முடிவடைந்துள்ளது. 2020 – 2022 காலப்பகுதியில் அடையாளங் காணப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் 500 கொரியா வோன் மில்லியன்களை வழங்குவதற்கு கொரியக் குடியசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இருதரப்பினர்களுக்கிடையே புதிய செயற்பாட்டுக் கட்டமைப்பு உடன்பாட்டை எட்டுவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

கொவிட் – 19 தொற்றால் அந்நிய செலாவணியின் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தின் காரணமாக பொருட்கள் இறக்குமதி செய்வதை முறைமைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சுங்கவரியை தீர்மானிக்கும் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஏற்புடைய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. ‘e – தக்சலாவ’ இனை தேசிய உத்தியோகபூர்வ இணையத்தள கற்கை முகாமைத்துவத் தொகுதியாக ஏற்றுக்கொள்ளல்

கொவிட்- 19 தொற்றால் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளைத் தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதற்காக கல்வி அமைச்சு இணையத்தளத்தின் வாயிலாக (Online) இணையத்தளக் கற்றல் நிகழ்ச்சித்திட்டமாக ‘e–தக்சலாவ’ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 01 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையான பாடவிதானங்களுக்கமைவான பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள், கற்கை உள்ளடக்கங்கள், காணொளிப் பாடங்கள், வினாத்தாள்கள், தெரிவு வினாக்கள் போன்ற கற்றல் வளங்களை மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்புண்டு. அதற்கமைய, ‘e – தக்சலாவ’ இணையத்தளக் கற்கை நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் பொதுவான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாடசாலைகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் ஏனைய கல்வி நிறுவனங்களில் இணையத்தளக் கற்கை தொகுதியாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையே அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், சமூக ரீதியானதும் தனிநபர்களுக்குமிடையேயான தொடர்புகள், மனிதவள அபிவிருத்தி மற்றும் பொதுவாக ஆர்வம் காட்டும் ஏனைய துறைகளை உள்ளடக்கியதாக இருதரப்புத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுதற்காக புரிந்துணர்வு உடன்பாடு எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையே குறித்த ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDG) பூர்த்தி செய்வதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்தல்

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வின் போது இலங்கை உள்ளிட்ட 193 நாடுகள் நிலைபேண்தகு அபிவிருத்தி 2030 இற்கான நிகழ்ச்சிநிரல் அங்கீகரிக்கப்பட்டது. அதன் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 17 இல் அதிகமானவற்றைப் பூர்த்தி செய்வதற்குப் பல சவால்கள் நிலவுவதாக 2020 ஆம் ஆண்டிற்கான உலக நிலைபெறுதகு அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலைமையை ஆராய்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் ஒப்புதலுடன் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன், நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயன்முறையை மேற்கொள்வதற்காக உயர்மட்ட அரசியல் தலைமைத்துவத்தின் தேவையை குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய, நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயன்முறைக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் வழிகாட்டுவதற்கும் கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் ஏற்புடைய அமைச்சர்கள் / இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கலாக கௌரவ பிரதமர் அவர்களும் வெளிவவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. 2020 மற்றும் தொடர் ஆண்டுகளுக்கான பிரதான வெளியுறவுக் கொள்கை ஆணை

‘சுபீட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள துறைசார் கொள்கைகள் மற்றும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் கீழ் காணப்படும் செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு 2020 மற்றும் தொடர் ஆண்டுகளில் கடைப்பிடிக்க வேண்டிய 20 விடயங்கள் அடங்கலாக அடிப்படை வெளியுறவுக் கொள்கை ஆணையை வெளிவிவகார அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து தயாரித்துள்ளது. அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் தொலைநோக்குடன் கூடிய இவ் ஆவணம், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி, வெளியுறவுக் கொள்கையுடன் ஒன்றிணைத்து இறைமையுடன் கூடிய தேசமாக சர்வதேச ரீதியில் தனது வகிபாங்கை எடுத்துக்காட்டுவதற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ் அடிப்படை வெளியுறவுக் கொள்கை ஆணை வெளிவிவகார அமைச்சு, வலய ரீதியான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவராலய குழுக்களுக்கு வழிகாட்டும் கொள்கை ஆவணமாக பயன்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

08. தேசிய அபிவிருத்தி ஊடக மையத்தை நிறுவுதல்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுகீட்சத்தின் நோக்கு’ இல் உள்வாங்கப்பட்டுள்ள அரச கொள்கை, அதன் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அவற்றின் உண்மையான முன்னேற்றங்கள் மக்களுக்கு சரியான வகையில் தொடர்பாடல் மேற்கொள்ளப்படாதமை தெரியவந்துள்ளது. அதனால், அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் ‘தேசிய அபிவிருத்தி ஊடக மையம்’ எனும் பெயரில் அலகு ஒன்றை நிறுவுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. 1973 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகைப் பேரவை சட்டத்தை திருத்தம் செய்தல்

பத்திரிகை செய்தியாளர்களின் செய்திகள் பிரசுரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் வெகுசன ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லெண்ண தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் 1973 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகைப் பேரவை சட்டத்தின் மூலம் இலங்கைப் பத்திரிகைப் பேரவை நிறுவப்பட்டுள்ளது. குறித்த சட்ட ஏற்பாடுகள் பத்திரிகைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதால் பத்திரிகைப் பேரவையை கட்டமைப்பு ரீதியாக மறுசீரமைத்து இலத்திரனியல், அச்சு மற்றும் நவீன ஊடகங்கள் உள்ளடங்கும் வகையிலும், ஊடகக் கல்வியை ஊக்குவிக்கும் மையமாகவும் மீள்கட்டமைக்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதனால், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கைப் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காகப் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கல்வியியலாளர் குழுவொன்றை நியமிப்பதற்கும், அதற்காக கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மக்களிடமிருந்தும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கமைய, திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. 1982 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டம் திருத்தம் செய்தல்

1982 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 38 வருடங்களாக எமது நாட்டின் ஊடகத் துறையில் விசேட பணியாற்றி வருகின்றது. சமகாலத்தில் நிலவும் கடுமையான ஊடகப் போட்டித்தன்மைக்கு முகங்கொடுத்து அதற்கு ஏற்புடைய வகையில் செயற்படுவதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்திற்கு தீர்மானம் எடுத்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது 07 பேர் கொண்ட பணிப்பாளர் சபைக்கு பொருளாளர் பிரதிநிதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான நிரல் அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அமைச்சின் வேறொரு பிரதிநிதியை நியமிப்பதற்கு இயலுமான வகையில் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை 09 ஆக அதிகரிப்பதற்கும் ஏற்புடைய வகையில் குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

11. அம்பாந்தோட்டை துறைமுகம் சார்ந்த கைத்தொழில் பேட்டை வலயம் மற்றும் தென்மாகாண கைத்தொழில் அபிவிருத்திக்கான வசதியளித்தல் மையத்தை நிறுவுதல்

1991 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கைத்தொழில் வலயம் / விஞ்ஞான பூங்கா அமைப்பதற்கும், அதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் முடியும். தென்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் கீழ் கைத்தொழில் வலயங்கள் சில அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கைத்தொழில் வலயங்களில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளையும் வசதியளித்தல்களையும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் மிடுக்கான பொறிமுறையுடன் கூடிய நிலையத்தை (Smart one stop Shop) குறித்த அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடியதாக அமைப்பதற்கும், குறித்த அலுவலக நடவடிக்கைகள் கைத்தொழில் அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தென்மாகாண பிராந்திய கைத்தொழில் மையத்தின் நடவடிக்கையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும், கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. 2020 தேசிய இரத்தின்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் (இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம்) கட்டளையை வெளியிடல்

1971 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபன சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய உருவாக்கப்பட்டுள்ள அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபன யாப்பின் சட்ட உறுப்புரைகளுக்கமைய தனிநபர் காணி உறுதிகள் அல்லது பிரத்தியேக உரித்துக் கொண்ட காணிகளுக்கு மட்டுமே இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, இரத்தினக்கல் அகழ்வுக்கான ஏதேனுமொரு காணியை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் காணிகளுக்கு இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறாயினும், சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் 20% வீதமானவை கூட்டு உரித்து அல்லது குத்தகை உரித்துடன் கூடிய காணிகளாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அவ்வாறான விண்ணப்பதாரிகளுக்கும் அனுமதிப்பத்திரத்தை வழங்கக் கூடிய வகையில் 1993 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2165/1 ஆம் இலக்க 2020 மார்ச் மாதம் 02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டளைகளுக்கான பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. முன்மொழியப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம்

‘சுபீட்சத்தின் நோக்கு’ சமகால அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்புடைய வகையில் கொழும்பு துறைமுக நகரம் இந்திய உபகண்டத்திற்கும் தென்கிழக்காசியாவுக்கும் சேவைகளை வழங்குவதற்கு பரந்துபட்ட விடயதானங்களுடன் கூடிய விசேட பொருளாதார வலயம் மற்றும் சேவைகள் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட சிறந்த வலய மையமாக மாற்றுவது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறந்த கட்டமைப்புடன் கூடிய போட்டித்தன்மையான, சட்ட வரையறை கொண்ட, வரி மற்றும் தரக்கட்டுப்பாடுகள், மற்றும் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் பொறிமுறை மூலம் முதலீட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், பத்தாக்குனர்கள், கம்பனிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றை கவர்ந்திழுத்து டுபாய், சிங்கப்பூர், ஹொங்க்ஹொங் போன்ற முதலீட்டு கேந்திர நிலையங்கள் மற்றும் போட்டித்தன்மையுடன் செயற்படக் கூடிய வகையில் வசதியளிக்கும் ஆர்வமிகுந்த சூழலை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய தேவைகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களைக் கவர்திழுக்கும் வகையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் கட்டமைப்புக்குப் பொருத்தமான வகையில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. 2020/21 பெரும்போகச் செய்கை நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்

ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் 2020/21 இற்கான பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், அதற்கமைய எதிர்பாராத அளவிலான விலைச்சரிவைக் கட்டுப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் 2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• தரநியமமான நாட்டரிசி நெல், ஈரலிப்பு 14% வீதமான நிர்ணய விலை ஒரு கிலோ 50.00 ரூபாவும், ஈரலிப்பு 14% – 22% வீதம் வரை ஒரு கிலோவுக்கு 44.00 ரூபாவுக்கும் கொள்வனவு செய்தல்

• தரநியமமான சம்பா நெல், ஈரலிப்பு 14% வீதமான நிர்ணய விலை ஒரு கிலோ 52.00 ரூபாவும், ஈரலிப்பு 14% – 22% வீதம் வரை ஒரு கிலோவுக்கு 46.00 ரூபாவுக்கும் கொள்வனவு செய்தல்

• உரமானியம் பெறும் சிறிய மற்றும் பாரிய நீர்ப்பாசன விவசாயிகள் விதைத்த நில அளவுக்கமைய குறைந்தது, 1 – 1.5 ஹெக்ரயார் இடையிலான விவசாயிகளிடமிருந்து 1,000 கிலோவும் 1.5 இற்கு அதிகமான 2 ஹெக்ரயார் வரையான விவசாயிகளிடமிருந்து 1,500 கிலோவும் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்தல்

15. 2020.11.29 அன்று மஹர சிறைச்சாலையில இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் விளக்க அறிக்கை

மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரால் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குறிவின் அறிக்கை மூலம் சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பான 03 விடயங்களின் கீழ் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

16. கொவக்ஸ் வசதியின் கீழ் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு எட்டுதல்

கொவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியை தயாரித்த பின்னர் குறித்த தடுப்பூசியை சமமாக நாடுகளுக்கிடையே விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களும் குறித்த உற்பத்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய உலகளாவிய அணுகுமுறையே கொவக்ஸ் என அழைக்கப்படுகின்றது. அதன் கீழ் கொவிட் – 19 இற்கான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதுடன் குறித்த தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பெற்றுக்கொள்வதற்காக நியாயமானதும் சமமானதுமான அணுகுமுறையை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையும் இக் கொவக்ஸ் செயன்முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கொவக்ஸ் வசதிகள் மூலம் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான தகைமையை எமது நாடு கொண்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் உள்ளடங்கலாக, GAVI நிறுவனம் (Global Alliance for Vaccines and Immunization) மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தடுப்பூசி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு படிமுறைகளின் கீழ் விண்ணப்பங்களை கோருமாறு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலக்குக் குழு மற்றும் தடுப்பூசியைக் களஞ்சியப்படுத்தும் இயலளவு தொடர்பாக தொழிநுட்பத் தகவல்கள் உள்ளடங்கிய தடுப்பூசி விண்ணப்பத்தின் முதலாம் மற்றும் A பகுதி 2020 திசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததுடன், இலங்கை குறித்த விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன் இரண்டாம் பகுதியான தடுப்பூசி பெறல் மற்றும் அதற்கமைவான முற்காப்பீட்டு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக 2021 சனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கமைய, சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி கொவக்ஸ் இற்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் B பகுதியை சமர்ப்பிப்பதற்கும், கொவக்ஸ் வசதிகள் மூலம் தடுப்பூசி வகைப்பிரித்து வழங்கும் பட்சத்தில் குறித்த தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.