தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொறுப்புக் கூறவேண்டும்- பிரசன்னா இந்திரகுமார்
யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமைக்கு எமது வலிகள், வடுக்கள், பாரம்பரியம், போராட்டம், தேசியம் என்பவற்றை மறந்து அரசாங்கத்திற்கும், அதனோடு இணைந்தவர்களுக்கும் ஆதரவு வழங்கி தங்களைத் தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொறுப்புக் கூறவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், தமிழீழ் விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
நேற்றுமுன் தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இந்த அரசாங்கத்தின் மற்றுமொரு இன அழிப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மக்களைக் கொல்வது மட்டுல்ல மக்களின் உணர்வுகளைச் சிதைப்பதும் ஒருவகை இன அழிப்பே. அந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் மிகக் கட்சிதமாகக் கையாண்டு வருகின்றது. தமிழர்கள் தொடர்பில் அனைத்து விடயங்களையும் பயங்கரவாதம் என்ற பார்வையில் பார்த்து இந்த அரசு எமது மக்களை முடக்கி, அடக்கி வைக்கும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளையும். பல்கலைக்கழக மாணவர்களையும், அதன் பணயாளர்களையும் நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியில் அரசு கைவைத்து அதன் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு முன்பிருந்த நிருவாகங்களினால் பரிபாலிக்கப்பட்டு வந்த அந்த தூபி தற்போது அழிக்கப்பட்டிருப்பதானது எதிர்காலத்தில் இன்னும் எவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கின்றனவோ என்று எண்ணத் தோணுகின்றது. அத்துடன் எத்தனையோ பல்கலைக் கழகங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்ட நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம் சார்ந்த இனத்திற்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்ற தோற்றப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவைப்படாது.
வெறுமனே அபிவிருத்தி மாயை பிடித்து அரசுடன் ஒட்டியிருக்கும் எம்மவர்கள் இதன் வலிகள் வேதனைகள் தொடர்பில் அறிவார்களா? அல்லது அறிந்தும் மௌனிகளாகவே இருப்பார்களா? அவர்கள் மௌனிகளாகத்தான் இருக்க முடியுமே தவிர அரசை எதிர்த்து மக்களுக்காக குரலெழுப்ப முடியாது.
வீதிகள், கட்டிடங்கள் எமது மக்களுக்கான விடிவினை ஒருபோதும் பெற்றுத்தராது. எமக்கான உரிமையுடன் எம்மால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளே எமது மக்களுக்கானதாக இருக்கும். தற்போது இடம்பெறுபவை அரசு சார்பானதாகவே இருக்கும். அதனை அரசு நினைத்தால் இல்லாமல் செய்து விட முடியும். அவ்வாறானதொரு நிலைமை தான் தற்போது வந்திருக்கின்றது.
இதற்கு வெறுமனே அரசாங்கமோ, அதிகாரிகளோ அல்லது அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளோ பொறுப்பாளிகளாக மாட்டார்கள். எமது வலிகள், வடுக்கள், பாரம்பரியம், போராட்டம், தேசியம் என்பவற்றை மறந்து அரசாங்கத்திற்கும், அதனோடு இணைந்தவர்களுக்கும் ஆதரவு வழங்கி தங்களைத் தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாக வேண்டும்.
இவ்வாறு எமது சின்னங்களை அழிப்பதன் மூலம் எமது மக்கள் மத்தியில் இருக்கும் உணர்வினைத் தடுத்துவிடலாம் என்று இந்த அரசாங்கமும், அரசாங்கத்திற்கு ஒத்துஊதும் அதிகாரிகள் சிலரும் நினைக்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடவாது. காட்டாற்று வெள்ளத்திற்கு அணைபோட்டுத் தடுப்பதென்பது கடினமான விடயம். அதனையும் விட வலிதான உணர்வுப் பெருக்கே எம் மக்களிடம் இருக்கின்றது. இவை வெறுமனே வாhத்தைகளால் உருவானதல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இச்செயற்பாட்டை நானும் ஒரு தமிழன் என்ற ரீதியில் அரசியலுக்கு அப்பால் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும். அரசுடன் இணைந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் இது தொடர்பில் கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களிடம் உண்டு. அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவார்கள். இதற்கான தக்க பாடத்தினையும் எமது மக்கள் சரியான நேரத்தில் வழங்குவார்கள்.
இனியும் இவ்வாறான பல விடயங்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் இருக்கக்கூடும். அவற்றைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் எம்முள் ஒற்றுமையுடன், தேசியம் சார்பான பற்று வேண்டும் என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை