ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழக்கு : பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று (27) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த வழங்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சம்மந்தமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இன்றையதினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கானது ஆரம்பத்திலே குற்றவியல் சட்ட கோவையின் 106வது பிரிவின் கீழே பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார்.

இவ்விடமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் சென்ற தடவை நீதிமன்றத்துக்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பிடியானை இருந்தது என தெரிவித்து  இன்று வரை மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள். அதற்கு முன்னர் குறித்த மூவரும் பிணையிலே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.

இன்றைய வழக்கில் காவல்துறையினர் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இதன் போது தொல்லியல் பொருட்களை சேதமாக்கினார்கள் என்ற ரீதியிலும், தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழே ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது என்பது அனைவருக்கு தெரிந்த விடயம்.  குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது சந்தேக நபர்களுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வாதிட்டோம்.

ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.ஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம். அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இங்கே தொல்பொருள்மிக்கதான மலையை சேதப்படுத்தியது அன்றி மரத்தாலான ஏணியை அப்புறப்படுத்தி விட்டு இரும்பிலான ஏணியை உருவாக்கினார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.ஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இது சம்மந்தமான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பிரதம அலுவலகத்தில் இருந்து இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும், காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய கடிதமும் உள்ளது.

ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.  இதேவேளை வழக்கு நீண்ட திகதி இடப்பட்டு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது ஒரு வழிபாடு சுதந்திரம் தொடர்புடைய விடயம். நீதிமன்றத்திலே நான் சமர்ப்பணங்களை செய்கின்ற போது அரசியல் அமைப்பு 14ம் 01இ கீழ் பூரண சுதந்திரம் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டினேன்.

இன்றைய நீதிவானுடைய முடிவு எங்களுக்கு பெரும் ஆறுதலைக்கொடுக்கின்றது. ஏனென்றால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தை தவறாக பிரயோகித்து அதன் கீழே பிணை கொடுக்க முடியாது என்கின்ற ஏற்பாட்டை காரணமாக வைத்து எங்களது பாராம்பரிய வழிபாட்டு தலங்களை முடக்குவதும் அதற்கு பாதகம் விளைவிக்கின்ற இந்த அரசின் செயற்பாட்டிற்கு அதற்கு எதிரான முதற்படியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆகவே ஆலய நிர்வாகத்தினர் சுதந்திரமாக நடமாட முடியும். அதுதான் எங்களது பிரதான நோக்கமாக இருந்தது. அதிலே நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆதிலிங்கேஸ்வரர் விடயத்திலே வழிபட விரும்புபவர்கள் எவரும் வழிபடக்கூடிய வகையிலே சட்டத்தின் துணையோடு அதனை உறுதி செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், அன்டன் புனிதநாயகம், குரூஸ் உட்பட சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.