ஒன்பது வளைவு பாலத்திற்கு 100 வருடங்கள் – தேசிய உரிமையாக்க நடவடிக்கை!

பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட புகையிரத பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலம் (Nine Arches Bridge) தை தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தி, நினைவு முத்திரை ஒன்றையும் வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

1921 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலத்திற்கு இவ்வருடம் 2021 ஆம் ஆண்டுடன் 100 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் செங்கல் மற்றும் சீமெந்துகள் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 25 அடி அகலம், 80 அடி உயரம், 300 அடி நீளம் கொண்டதாகக் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளராக டீ.ஜே. விமலசுந்தரவும் வடிவமைப்பாளராக ஹரல்ட் குத்பேர்ட் மார்வூட் அவர்களும் இதனை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்டபோது, பீ.கே அப்புஹாமி என்பவரினாலேயே குறித்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

இன்றைக்கும் ஒருநாளைக்கு சுமார் 6 தடவைகள் ஒன்பது வளைவு பாலம் ஊடக புகையிரதப் பயணங்கள் இடம்பெறுகின்றன.
உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வென்றுள்ள இந்த ஒன்பது வளைவு பாலம் இலங்கையின் பிரதான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.