922 நாட்களை கடந்தது பொத்துவில் கனகர் கிராம மக்களின் நில மீட்பு போராட்டம். காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தில் கலையரசன் எம்.பி மக்களிடம் எடுத்து கூறினார்

(சந்திரன் குமணன்)

அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினராகஇருக்கும் தமிழ் மக்கள் பாரிய சவால்களையும் தேவைகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள். அவற்றிலொன்றுதான் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டமாகும். இவர்களது போராட்டம் 922 நாட்களை கடந்துள்ளது.

 

நாளை இடம்பெறவுள்ள பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம்  காலாகாலமாக வாழ்ந்து வந்த காணியை மீட்டுத் தருவதற்கான நியாயப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும்  என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்கள்   வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போராட்டக் குழுவின் தலைவி றங்கத்தனா, உறுப்பினர் ராசா ஆகியோர் மிகவும் உருக்கமாக தமது போராட்டம் இவ்வாறு 922 நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும்  விளக்கமாகக் கூறினர்.

அம்பாறைமாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ஆம் கட்டை ஊறணி எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப் போராட்டம் தொடங்கி 922 ஆவது நாட்களை கடந்து நகர்கின்றது . அவர்கள் கடந்த 2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 30 வருடங்களாக அங்கு வனபரிபாலன இலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.  தற்போது அரச தரப்பில் நல்லெண்ண சமிக்ஞைகள் கிடைத்துள்ளது.

எது எப்படியிருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடு மண்டிக் காணப்படுகின்றது. அந்தக் காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும். தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில்  தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீளவும் குடியமர்த்த பட வேண்டும் என நீண்ட காலமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்களுக்கு  குடியமர்த்த படும் விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எம்மை சந்தித்த மக்கள் என்னிடம் கூறிய போது ஆரம்பத்தில் எவ்வாறு குடியமர்த்தப்பட்டோமோ அந்த அடிப்படையில் எமக்கு காணிகள் வழங்க பட வேண்டும் என்றும்  இங்கு வாழ்ந்த அனைவரும் குடியமர்த்த பட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இருக்கின்றனர் இது நியாயபூர்வமானது . இம் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று இறுதி கட்ட வேலைப்பாடுகளுக்கு நாம் வந்துள்ளோம் .  கட்சி பேதமின்றி  அரசியல் பிரமுகர்கள் , தன்னார்வலர்கள்  என பலரும் கனகர் கிராம மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.

யுத்த சூழலால் இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வறுமையாக இருக்கின்றார்கள் நாட்கூலியாக இருக்கின்ற மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது . அவர்களது வாழ்க்கை தரம் உயரவேண்டும் எனில் வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். என தெரிவித்தார்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் , பொத்துவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சமூகம் தந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.