கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்கள் போராட்டம்!

கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்கள் 47 பேர் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பந்தலிலிருந்து குறித்த போராட்டம் இன்று காலை 6 மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

5 வருடங்களிற்கு மேலாக அயல் பணியாளர்களாக கடமையாற்றிவரும் தமக்கான நிரந்த நியமனம் வழங்கப்படாது, ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் ஊடாக புதியவர்களை இணைக்க முயற்சிப்பதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று ஒருநாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பல்வேறு தரப்பினருக்கும் மகயர் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் ஊடாக புதியவர்களை நியமிக்க அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும், அந்த வேலை வாய்ப்பின் ஊடாக நீண்டகாலமாக அயல் பணியாளர்களாக சேவையில் ஈடுபட்டுவரும் தமக்கு நிரந்தர நியமனத்தை தரவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை நிரந்தர பணியாளர்களுடன் இணைந்து கிளிநொச்சி நகரில் உள்ள கழிவகற்றும் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதார சிற்றூழியர்களாக பிரதேச சபையில் பணியாற்றும் இவர்கள் இன்று நகர துப்பரவாக்கல் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. இதேவேளை நிரந்தர பணியாளர்கள் சிலரைக்கொண்டு நகரை துப்பரவு செய்யும் பணிகளிற்கு செல்ல முற்பட்டபோது வாகனங்களை மறித்து அவை வெளியே செல்லாத வகையில் பிரதான வாயிலையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பதிகாரி ஜெயகாந்தன் பேச்சுவார்த்தை நடார்த்திய போதிலும், அவர்கள் குறித்த வாகனங்களை வெளியேற விடாது தமது போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்து தொடர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.