டக்ளஸை சந்திக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மறுப்பு

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகள் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

மாறாக தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதி மன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாம் அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும் அமைச்சரால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும் எனத் தெரிவித்த கனகரஞ்சனி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது.

இந்நிலையில் அந்த அரசின் பிரதிநிதியாக உள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை என்றும் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு தயாரில்லை என்பதனை உறுதியாக தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.