கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கிய சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா சிறுவர் இல்ல மற்றும் சிறுவர் கழக மாணவர்களுக்கு பரிசில்கள்

கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்ல பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (26) பிற்பகல் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கொரோனா தொற்றையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்த காலப்பகுதியில் அவர்களது ஆக்கத்திறன் மற்றும் கலைதிறனை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்லங்களில் இருந்த பிள்ளைகளிடையே  வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஐஓஎம் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அணுசரணையில் சித்திரப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.

குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாங்குளம், கொல்லர் புளியங்குளத்தைச் சேர்ந்த த.ஜதுசா என்ற மாணவிக்கு 15 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தைப் பெற்ற நெடுங்கேணி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கே.மகிழன் என்ற மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அல்ஹாமியா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.எவ்.நுஹா என்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டதுடன் வெற்றியீட்டிய 47 பேருக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, ஐஓஎம் நிறுவன நிகழ்சித்திட்ட பணிப்பாளர் எஸ்.ஜமீன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சபரிஜா, வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ரி.தர்மேந்திரா, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெக்கெனடி, மாவட்ட சிறுவர் கழக தலைவி சசிராஜ் அக்சயா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.