காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவை

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிளிநொச்சியில் காணி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விசேடமாக காணிகளை அளவிடும் செயற்பாடுகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதுடன் இதனால், நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றை நாடு முழுவதும் முன்னெடுப்பது பொருத்தமானது என இக்குழுவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த காணி அமைச்சின் அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையொன்று பரீட்சார்த்தமாக திரப்பனே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினர்.

இதேவேளை, காணி உரிமைப் பத்திரங்களைக் கொண்டிருக்காத விகாரைகள் போன்ற மதஸ்தலங்களுக்காக அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

விசேடமாக உரிமைப் பத்திரங்களைக் கொண்டிராத சுமார் 325 விகாரைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு விகாராதிபதி எனும் பதவியின் பெயரில் உரிமைப் பாத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மேலும், கிளிநொச்சி பிரதேசத்தில் காணப்படும் சில காணிகள் தொடர்பான சிக்கல்கள், காணிகளை அளக்கும் பணிகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களைக் குறைத்தல், அதிகாரம்பெற்ற நில அளவையாளர்களின் பணிகளை அரச தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படாமை தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஏனைய பிரதேச ரீதியாகக் காணப்படும் காணி தொடர்பான சிக்கல்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாயாதுன்ன சிந்தக அமல், சார்ள்ஸ் நிர்மலநாதன், சுதத் மஞ்சுள, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, ரோஹன திசாநாயக்க, அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஷாரப், மஞ்சுளா திசாநாயக்க, காதர் மஸ்தான், முதிதா டி. சொய்ஸா, குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.