நீரிணைப்புக்காக மாநகர சபை வீதிகளை சேதப்படுத்தல், செப்பனிடல் தொடர்பிலான அறிவித்தல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

குழாய் நீர் இணைப்புக்காக குழி தோண்டி சேதப்படுத்தப்படும் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான வீதிகளை, இணைப்புப் பெறுகின்ற நபரே மீளச்செப்பனிட வேண்டும் எனவும் அதற்கான மதிப்பீட்டுத் தொகையை அவர் மீளப்பெறும் பணமாக, மாநகர சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கல்முனை மாநகர சபை வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் எவரேனும் குழாய் நீர் இணைப்புக்காக மாநகர சபைக்கு சொந்தமான வீதிகளை குழிதோண்டி சேதப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை மாநகர சபை நிதிப்பிரிவில் சமர்ப்பித்து, களப்பரிசோதனைக்காக 500 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையடுத்து, களப்பரிசோதனைக்காக வருகின்ற மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் வழங்கப்படும் மதிப்பீட்டறிக்கையில் குறிப்பிடப்படுகின்ற மீளப்பெறத்தக்க பணத் தொகையை மாநகர சபைக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னர் குழி தோண்டுவதற்கான அனுமதி மாநகர சபையினால் வழங்கப்படும்.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டு, 03 மாத காலத்தினுள் சேதப்படுத்தப்பட்ட வீதியானது குறித்த நபரினால் மீளச்செப்பனிடப்பட வேண்டும். அவ்வாறு செப்பனிட்ட பின்னர், மாநகர சபைக்கு எழுத்து மூலம் அறிவித்து, மீளளிப்புத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இக்காலப்பகுதிக்குள் வீதியை செப்பனிடத் தவறினால், குறித்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவரிடமிருந்து நஷ்டஈடும் தண்டப்பணமும் அறவிடப்படும்- என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.