லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு லைக்கா நிறுவன ஸ்தாபகர் சுபாஸ்கரன் உறுதியளிப்பு!

லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் ஐபிஜி குழுமத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ஆதரவை அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அல்லிராஜா சுபாஸ்கரன், கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்துள்ளார் என்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லங்கா பிரீமியர் லீக்கின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் அனில் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் அனில் மோகன் பாராட்டியுள்ளார்.

ஐரோப்பா, தென்னிந்தியா என உலகளவில் வலுவான நிலையில் உள்ள லைக்கா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கின் யாழ்ப்பாண அணிக்கான உரிமையை வாங்கியதில் இருந்து, லங்கா பிரிமியர் லீக் தொடரில் முக்கிய பங்குதாரராக அல்லிராஜா சுபாஸ்கரன் இருந்து வருகிறார்.

நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் மூன்று பருவத்திலும் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியே மகுடம் சூடியிருந்த நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணி என்பதை நிரூபித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் தொடர், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஏலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஏல முறையை உள்ளடக்கிய உலகளவில் மூன்றாவது கிரிக்கெட் லீக் தொடர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான ஏலம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஷங்ரிலாவில் இடம்பெற உள்ளமை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.