பருத்தித்துறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு திருமணம்..

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், காவல்துறையினர் இணைந்து ஆலய முன்றலில் வைத்து சுகாதார நடைமுறைகளின் சமய ஆசாரப்படி திருமண நிகழ்வு நடத்தப்பட்டது. அதன்பின்னர் புதுமணத் தம்பதியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தலில் உள்ள பெண்ணொருவருக்கு இன்று (சனிக்கிழமை) திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அதனை முன்னிட்டு மணமகனின் குடும்பத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னுருக்கு வைபவமும் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய திருமண நிகழ்வு தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள ஆலய முன்றலில் மணமக்களுடன் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேரின் பங்கேற்புடன் திருமண நிகழ்வு நடத்த இன்று அனுமதியளிக்கப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகர், காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் சிவாச்சாரியார் ஒருவரால் இந்தத் திருமண நிகழ்வு இன்று முற்பகல் இந்து சமய முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுமணத் தம்பதி சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் எதிர்வரும் 28ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என சுகாதார மருத்துவ அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.