தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கையே ஆணைக்குழு! -சிறிநேசன்

அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்பது தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னளா் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினைக் கோருவதற்காகவுமான ஒரு போலித்தனமான முறையில் யுத்தக் குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இன அழிப்புச் செய்யப்பட்டனர். அடுத்ததாக தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்கின்ற காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அடுத்தக் கட்டமாக கலாசார அழிப்பு நடைபெற்று வந்தது.

இவ்வாறு 1958இல் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இந்த அழிப்பின் தொடர்ச்சியாக காணி அபகரிப்பு, கலாசார அழிப்பு போன்ற விடயங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

ஒரு இனத்தை இல்லாமல் ஆக்குவதென்றால் இனத்தை அழிப்பது, இரண்டாவதாக அவர்களுடைய காணிகளைத் திட்டமிட்டு அபகரிப்பது, மூன்றாவதாக அவர்களுடைய கலாசாரச் சின்னங்களை அழித்தொழிப்பது நடைபெறும்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் பேரின மயமாக்கல், பௌத்த மயமாக்கலுக்குரிய வேலைத் திட்டத்தின் கீழான பாதையில் துரிதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது.

உலக நாடுகளெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த நாடு கலாசார அழிப்பு விடயங்களிலும் காணி அபகரிப்பு விடயங்களிலும் ஈடுபடுகின்றது.

புதிய அரசாங்கம் வந்ததும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களும் மீண்டும் வந்துள்ளனர். பழையபடி இன முறுகல், இன மோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன அழிப்பு மூலமாக, கலாசார அழிப்பு மூலமாக, காணி அபகரிப்பு மூலமாக தமிழ் பேசுகின்ற மக்கள் ஒடுக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றது. இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஜனாதிபதி யுத்ததின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு தொடர்பான விடயங்கள், யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எவ்விதமான கருத்துகளையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், காணாமல் போனவர்களை மறந்துவிடுங்கள், காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப் தேடிப்பாருங்கள் என விமல் வீரவங்ச போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்த சூழலில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன. இந்நிலையில், காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினைக் கோருவதற்காகவும் ஒரு போலித்தனமான முறையில் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்றொரு குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பாகும். இதனை மக்கள் ஒரு துளியும் நம்பமாட்டார்கள். அரசாங்கத்தின் பக்கம் நின்று தலையாட்டிக் கொண்டிருப்பவர்கள் அனைத்துக்கும் தலையாட்டுவார்கள்.

அதனைவிட, ஜெனிவாவுக்கும் சென்று இங்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று சொல்வதற்குக்கூட சாட்சியமாக இருப்பார்கள். இதுவே உண்மை நிலையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.