ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்! -உதய கம்மன்பில

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன.”

– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் திரண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசுக்கு எதிராக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், போராட்டங்கள் நடத்தியோ அல்லது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அழுத்தங்கள் கொடுத்தோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது.

நாட்டின் இறையாண்மையை மீறி எவரும் அரசை நோக்கிக் கைநீட்ட முடியாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே நாம் செயற்படுகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டை சர்வதேசத்திடம் நாம் அடகுவைக்கமாட்டோம். அதைச் செய்வதற்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கவில்லை.

சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை எவரும் உதாசீனம் செய்ய முடியாது.

மக்களின் ஆணையை ஏற்றே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகினோம்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கொள்கை.சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்காமல் தேசிய பிரச்சினைக்குப் பொதுவான ஓர் அரசியல் தீர்வையே எமது அரசு வழங்கும்.

நாட்டின் சட்ட திட்டங்களை மீறி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றீர்கள் என தமிழ் சிவில் சமூக அமைப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.