கைவிடப்பட்டிருந்த பல நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு  பிரதமர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.