மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்-பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவைக் கூட்டமுமாகவே மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் திகழ்ந்தன. மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து நாடுகளையும் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும், கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்களின் கொரோணா உடலங்கள் குறித்தான கோரிக்கையை வைத்து இரு சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அரசு தன் அரசியலைச் செய்ய முற்படுகின்றமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (06) மட்டு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தற்போதை சமகால அரசியல் நிலைமைகள் குறித்தான மூன்று விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் பெயரளவில் தான் அவை அபிவிருத்திக் கூட்டம் என்று சொல்லாம் ஆனால் நடந்த விடயங்ளை வைத்து அவை நகைச்சுவைக் கூட்டங்கள் என்றே சொல்ல வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியினை உரிய அதிகாரிகள் பொருத்தமான இடங்களுக்கு பகிர்ந்த விடயங்களை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற ரீதியில் ஒருவர் இருந்து அனுமதி வழங்கியது மாத்திரம் தான் அதில் இடம்பெற்றன. மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்த நாங்கள் பல விவாதங்களை மேற்கொண்டும் அவற்றுக்கான எவ்வித தீர்மானங்களும் அக்கூட்டங்களில் எடுக்கப்படவில்லை.

சில கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். அத்துடன் சில கூட்டங்களில் பிரதேச சபை உறுப்பினர்களுக்குக் கூட அனுமதியளிக்கப்படவில்லை என்றும் கேள்விப்பட்டோம். எனவே நடைபெற்றது ஒரு அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்ல முடியாது. அனைவரின் நேரத்iயும் வீணடிக்கின்ற கூட்டமாகவே எங்களுக்குத் தென்பட்டது.

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மண்அகழ்வு, இல்மனைட்டு, தொல்பொருள், மேய்ச்சற்தரைப் பிரச்சனை போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் எங்களால் கேள்வியெழுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக மண் அகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான அதிகாரி அதாவது பதில் வழங்கக் கூடிய அதிகாரி எவ்வித கூட்டங்களுக்கும் கலந்து கொள்ளவில்லை. பதில் சொல்ல முடியாத கனிஸ்ட அதிகாரிகளே அக்கூட்டங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். இவ்வாறிருக்கையில் எவ்வாறு கூட்டஙகளில் பிரச்சினைகளைக் கேட்பது, தீர்மானங்களை எடுப்பது?

அதே போன்று கிரான் பிரதேசத்தில் முறுத்தானை பகுதியில் மண் அகழந்து தற்போது அங்கிருக்கும் இரண்டு பாலங்கள் இடிந்து விழும் தருவாயில் இருப்பதாக மக்கள் தெரிவித்தமைக்கமைவாக நான் உட்பட எமது சக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டத்தில் மக்களுடன் இணைந்து பல அழுத்தத்தைக் கொடுத்தோம். அதன் பின்னரே அங்குள்ள ஒரு சில அனுமதிப்பத்திரங்களை நிறுத்துமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது. நடைபெற்ற நான்கு கூட்டங்களிலும் முக்கியமாக எடுக்கப்பட்ட தீர்மனம் அது மாத்திரமே என்றுதான் சொல்ல முடியும்.

இந்த மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித கவனமும் எடுப்பதாக அந்தக் கூட்டங்கள் நடைபெறவில்லை. தங்களுடைய அரசியலை வளர்த்துக் கொள்வதற்கான கூட்டமாகவே இது மாற்றப்பட்டிருந்தது. அதாவது அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவே இக்கூட்டங்கள் திகழ்ந்தன.

அடுத்த விடயமாக ஐநா அனித உரிமைப் பேரவை தொடர்பில் பலரும் பலவாறாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர்கள் என்ற வகையில் இலங்கைக்கு எதிரானதொரு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் வாக்களித்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் நாங்கள் முயற்சிக்க வேண்டிய விடயம். இன்று நாங்கள் எடுக்கும் தீர்மானத்தை வலுச்சேர்க்கச் சொல்லி இலங்கையிலும், சர்வதேசத்திலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதிலும் அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடில்லாமல் நடக்கின்றதென்பது மேலும் வரவேற்கத்தக்க விடயம். அவ்வாறில்லாமல் அரசியல் பிரமுகர்கள் நாங்கள் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் போது இது அரசியலுக்கான ஒரு விடயம் என்று மாற்றப்படுகின்றது.

அந்த வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை எவ்வாறாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். அத்துடன் குறிப்பாகச் சொல்லப் போனால் இது இலங்கைக்கு எதிரானது என்பதை விட மனித உரிமை மீறலுக்கு எதிரானது என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் இதற்கு நிச்சயமாக அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து நாடுகளையும் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

அடுத்த விடயமாக அண்மைய காலமாக தமிழ் முஸ்லீம் உறவு பலமாக வந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்து இந்த கொரோணா மரண உடலங்களை வைத்து மீண்டும் ஒரு பிரிவினையை அரசு கையாளுகின்றது. இஸ்லாமியர்கள் மாத்திரமல்லாமல் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அடக்கம் செய்வதே அவர்களின் மத ரீதியான முறையாகும். அந்த வகையில் இந்த இரண்டு மதத்தவர்களுடைய உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அதனை வைத்து மீண்டும் இந்த தமிழ் முஸ்லீம் உறவைப் பிரிக்கும் முகமாகவும், அவர்களின் ஒற்றுமைகளைப் பாதிக்கும் வகையிலும் இரணைமடுப் பிரதேசம் தொடர்பான சில தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது.

உண்மையில் இறந்த  உடலங்களை அவர்களின் உறவினர்கள் இருக்கும் இடத்தைத் தாண்டி சுமார் 200 கிலோமீட்டர்களுக்கும் மேல் கொண்டு சென்று புதைப்பதற்கு அந்த உறவினர்கள் உடன்படமாட்டார்கள். அவர்கள் பிரதேசங்களில் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கத் தயார் எனும் போது இதனை வைத்து அரசாங்கம் அரசியல் செய்வதென்பது மிகவும் கேள்விக்குட்படுத்தும் விடயமாகும். கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்களின் கோரிக்கையை வைத்து அரசியல் செய்கின்ற அரசு அதன் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்தினூடாகவும் தன் அரசியலைச் செய்ய முற்படுகின்றமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.