தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்.

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு:
ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன?

நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு
உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம் 08.12.2021

கேள்வி எண்: 1160

கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி, தமிழ்நாட்டு அரசிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பம் ஏதேனும் வந்ததா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் நிலை என்ன?

3. எத்தனை பேர் இறந்தார்கள்? எவ்வளவு மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்தன?

4. பாதிப்புகளைக் கண்டு அறியவும், எவ்வளவு உதவிகள் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய அரசின் சார்பில் ஏதேனும் குழு அனுப்பப்பட்டதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

ஆமாம். தமிழ்நாடு அரசு ஒரு கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து இருக்கின்றது. பலத்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, ரூ 549.63 கோடி நிதி உதவி கேட்டு இருக்கின்றார்கள். 54 பேர் இறந்தனர்; 6871 கால்நடைகள் இறந்தன; வீடுகளுக்கும், 51025.64 ஹெக்டேர் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

பேரிடர் மேலாண்மைப் பொறுப்புகள், மாநில அரசின் கடமை ஆகும். அதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து, (State Disaster Response Fund (SDRF) ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இசைவு பெற்று, மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்காக, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, கடுமையான பாதிப்புகளுக்கு, ஒன்றிய அரசின் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரையின்படி, நிதி உதவி வழங்கப்படுகின்றது.

அதன்படி, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கின்றது.  அந்தக் குழு, நவம்பர் மாதம், 21 முதல் 24 வரை  தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது.

அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளின்படி நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் 2021-22 நிதி ஆண்டில், தமிழ்நாடு அரசுக்கு, SDRF நிதியில் இருந்து, 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.“அதில் ஒன்றிய அரசின் பங்கு 816 கோடி; மாநில அரசின் பங்கு 262 கோடி. ஒன்றிய அரசின் பங்கு, முன்னதாகவே இரண்டு தவணைகளில் 408 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றது.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.