பூமிக்கடியில வீடு.. அதுவும் இவ்ளோ வசதிகளோட.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..
இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
பூமிக்கு அடியில் வீடு
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் பூமிக்கு அடியே அமைந்துள்ள வீட்டின் வசதிகள் குறித்து விளக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள SaffronStays AsanjA எனும் இந்த இடம் முழுவதும் பூமிக்கடியில் அமைந்து உள்ளது. நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஹாப்பிட் ஹோம்ஸ் (hobbit homes) அடிப்படையில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முழுவதும் பூமிக்கு அடியில் இருந்தாலும் இதில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதியுடன் ஜன்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மூர்தாபாத்தில் இந்த வீடு அமைந்துள்ளது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அழகான வீட்டின் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா அதில்,”வசீகரிக்கும் வீடு. மிகவும் “குளிர்ச்சியான(cool)’ வடிவமைப்பு. நான் அந்த வார்த்தையை (cool) ஒரு நேரடி அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன். காலநிலையை கட்டுப்படுத்தும் வகையிலான கட்டுமானம். இது விருந்தோம்பலின் எதிர்காலம். ஏனெனில் மக்கள் கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய இடத்தை தேடுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரையில் 77,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், நெட்டிசன்கள் இந்த வீட்டின் கட்டுமானம் மற்றும் உள்ளே அமைந்திருக்கும் வசதிகள் குறித்து சிலாகித்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை