உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு பற்சிகிச்சை மருத்துவ முகாம் கல்முனையில்!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அதற்கு முன் உள்ள மாதத்தையும் பின்னுள்ள மாதத்தையும் தேசிய வாய் சுகாதார விழிப்புணர்வு மாதங்களாக பிரகடனப்படுத்தி பல்வேறு வேலை திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இலங்கை பற்சிகிச்சை சங்கத்தோடு இணைந்து ‘மகிழ்ச்சியான வாய் ஆரோக்கியமான உடல்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த
பற்சிகிச்சை மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு என்பன இன்று (வெள்ளிக்கிழமை) பெரியநீலாவணை ஆயுர்வேத வைத்தியசாலையில் பிராந்திய வாய் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.சறூக் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு வாய் சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் மருத்துவ முகாமில் வாய் சுகாதாரம் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பற்சிகிச்சைகளும் இங்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநி திருமதி சகீலா இஸ்ஸடீன், இலங்கை பற்சிகிச்சை சங்கத்தின் கிழக்கு பிராந்திய தவிசாளர் வைத்தியர் கேதீஸன் உட்பட பல் வைத்திய அதிகாரிகள் , பிராந்திய சுகாதார பணிமனையின் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.