கலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா?

அரிதலைச்சி, படத்தில் காணவே சற்று கொடூரமான தோற்றம் கொண்டிருக்கும் தேவியின் அம்சம் இவள். மகாவித்யா என அழைக்கப்படும் பத்து தேவதைகளில் இவளும் ஒருத்தி. தனது தலையை தானே அரிந்து கையில் ஏந்தி இருப்பது போல காட்சியளிப்பவள்.

இதனாலேயே அரிதலைச்சி என்ற பெயர் பெற்றாள். தேவியின் குரூரமான அம்சமாக கருதப்படும் இவளுக்கு, சின்னமஸ்தா மற்றும் பிரசண்ட சண்டிகை என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.

அரிதலைச்சி என்ற பெயருக்கு, அம்சத்திற்கு தன்னை தியாகம் செய்தல் என்றொரு கோட்பாடும் இருக்கிறது. சுயக்கட்டுப்பாடு, கலவி, வேட்கை, கலவியாற்றல் என பல கோட்பாடுகளின் உருவகமாகவே அரிதலைச்சி காணப்படுகிறாள்.

பார்க்க மட்டுமல்ல, அரிதலைச்சியை வணங்கும் வழிமுறைகளும் கூட சற்றே ஆபத்தானது என கூறுகிறார்கள். மேலும், தாந்திரீகம் செய்பவர்களே கூட, அரிதலைச்சியை வழிப்பட வேண்டாம் என எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

பௌத்த கதை!

அரிதலைச்சியைப் போன்றே திபெத்தில் வஜ்ரயோகினி என்பவரின் சின்னமுண்டா என்ற தலை அரிந்த தோற்றம், அப்படியே அரிதலைச்சியின் அமைப்பை போலவே இருக்கிறது. மேகலை, கங்கலை என்ற பௌத்தத்தின் கிருஷ்ணாச்சாரியர் எனும் வகுப்பை சேர்ந்த இரு சகோதரிகள், தங்கள் குருவின் முன், தங்கள் தலையை அரிந்து நடனம் ஆடியதாகவும். இந்த சகோதரிகளுடன் வஜ்ரயோகினி என்பவரும் சேர்ந்து ஆடினார் என்றும் ஒரு பௌத்த கதை மூலம் அறியப்படுகிறது.

 

மற்றொரு கதை!

லக்ஷ்மிங்கரை என்ற இளவரசி, பத்மசம்பவ புத்தரின் அடியவளாக இருந்தாள். இவள் தனது தலையை அரிந்துக் கொண்டு, ஊர் முழுவதும் சுற்றி வந்து சின்னமுண்டா வஜ்ரவராகி என்ற பெயர் பெற்றாள் என்றும் மற்றுமொரு கதை மூலம் அறியப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டு!

சில ஆய்வாளர்கள் இந்து மதத்தில் சின்னமஸ்தா என வணங்கப்படும் தேவியின் அம்சமானவள், பௌத்த நாட்டில் இருந்த சின்னமுண்டாவின் தோற்றமே என்றும். அங்கிருந்து தான் இந்த வழிபாடு துவங்கியது என்றும் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். மேலும், சிலர் வேத காலங்களில் இருந்த கடவுளாக காணப்படும் நிர்ரித்ரீயின் மாறுபட்ட தோற்றமே, இன்று நாம் வணங்கும் காளி, சாமுண்டி மற்றும் அரிதலைச்சி போன்றவர்கள் என்கிறார்கள்.

இரத்தம்!

நமது மதத்தில் இரத்தவெறி பிடித்த பெண் தெய்வங்கள் என பலர் இருக்கிறார்கள். ஆனால், அவற்றுள் தனது தலையை தானே கொய்து மறு கையில் கொடுவாளுடன் நடந்து வருவது போன்ற குரூரமான தோற்றத்தில் அரிதலைச்சி தவிர வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்தப் பிரமோதம்!

சாக்தப் பிரமோதம் என்ற புத்தகத்தில் அரிதலைச்சியின் வேறு நூறு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அதில், பிரசண்ட சண்டிகை என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. தேவாசுரப் போரில் அசுரரை கொன்றுத் தீர்த்த பிறகும் கூட வெறி தீராமல், தனது தலையை தானே கொய்துக் கொண்டு, தனது குருதியை அருந்தியதால், சின்னமஸ்தை என அழைக்கப்படுவதாகும் சில கிளை கதைகள் கூறப்படுகின்றன. மேலும், பெரும்பாலான கதைகளில், அரிதலைச்சி அவளது தியாகம், தாய்மை, உலக நலன் போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டுருக்கின்றன.

சிவப்பு நிறம்!

அரிதலைச்சியின் தோற்றம் சிவப்பு நிறமாக இருக்கிறது. இதை சிலர் செம்பருத்தி நிறம் என்றும், சிலர் இரத்த நிறம் என்றும் கூறுகின்றனர். அரிதலைச்சியின் வயது பதினாறு தான் என்றும். இவர் தலைவிரி கோலத்தில் நிர்வாண நிலையில் தோற்றமளிப்பவள். இவள் தனது ஒரு கையில் கொய்த தலையையும், மறு கையில் கொடுவாளும் கொண்டிருக்கிறாள். இவரது தலையில் இருந்து பீய்ச்சி அடிக்கும் இரத்தத்தை, இவரது தோழிகள் இடாகினியும், வாருணியும் அருந்துவது போன்றே அரிதலைச்சியின் தோற்றம் இருக்கிறது. இவள் மதனனுடனும், சிவனுடனும் கலவியில் ஈடுபட்டிருப்பதாக கதைகளில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு!

அரிதலைச்சியின் உருவ அமைப்பு மற்றும் தோற்றத்தை வைத்து, அவள் வாழ்க்கை, மரணம் மற்றும் கலவி மூன்றும் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளது என்பதை விளக்குகிறாள் என கூறுகிறார்கள். மற்றொரு கோணத்தில், காமனும் ரதியும் மூலாதார சக்காரத்தைக் குறிப்பதாகவும், இடை, பிங்கலை, சுசும்னா நாடிகளூடாக குண்டலினி சக்தி தலையைத் தனியே பிரித்து வெளியேறுவதை அரிதலைச்சியின் கழுத்திலுள்ள மூன்று இரத்த ஊற்றுகள் குறிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

வழிப்பாடு முறை…

மகாவித்யாக்கள் என கூறப்படும் பத்து தேவிகளில் மிக குறைவான ஆலயங்கள் கொண்டிருப்பவள் அரிதலைச்சி. மனித இரத்தம் மற்றும் தசை போன்றவற்றால் அதிக மகிழ்ச்சி அடைபவளாக அரிதலைச்சியை சித்தரிக்கிறார்கள். மேலும், கன்னிப்பெண்ணுடன் உறவாடுதல், மது, பலி என இவளை வணங்கும் முறைகள் கடுமையாக இருக்கிறது.

இடாகினிப் பேய்!

அரிதலைச்சியை ஒரு பெண் வணங்கினால், அவள் கணவன், பிள்ளைகளை இழந்து இடாகினிப் பேயாய் அலைவாள் என்றும் கூறுகிறார்கள். இதுக் குறித்த தகவல்கள் சாக்த புத்தகங்களில் எச்சரிக்கையுடன் கூறப்பட்டுள்ளன. அதேப்போலே, இவளை வணங்க வருபவர்கள் வழிப்படும் போது குறை இருந்தால், அவர்களின் தலையை கொய்து இரத்தம் குடித்துவிடுவாள் என்றும் கூறுகிறார்கள்.

ஸ்தலங்கள்!

அரிதலைச்சியை இமாசலப் பிரதேசத்தில் உள்ள சிந்துபூர்ணி எனும் பகுதியில் சின்னமஸ்திகா என்ற கோவில், தாட்சாயிணியின் திருப்பாதம் விழுந்த சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. காசிக்கு அருகே உள்ள ராம்நகர், ஜார்கண்டில் இருக்கும் நந்தன பர்வத் மலை மற்றும் மேற்கு வங்கத்தில் இருக்கும் விஷ்ணுபூரிலும், நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் என சில இடங்களில் மட்டும் அரிதலைச்சிக்கான ஆலயங்கள் இருக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.