மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை – கட்டுப்பாடுகள் குறித்து முழு விபரம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து சேவைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுமென போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேருந்து போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் நிட்டம்புவ வரையில் மாத்திரமே இடம்பெறும் என்றும் இலக்கம் 05 வீதி ஊடாக செல்லும்  மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் மினுவாங்கொடைவரை மாத்திரமே செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி வீதி ஊடாக செல்லும் பேருந்துகள் பாணந்துறை வரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பேருந்துகள் அவிசாவளை வரை பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பேருந்து சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்துகள் போதியளவு இல்லாவிட்டால், தாம் அவற்றை கொண்டு வருவோம் என்றும் சேவையில் ஈடுபடாத பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம் என்றும் பேருந்துகளில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு பயணியும் கட்டாயம் முககவசத்தை அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகளுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் கால எல்லையை ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.