தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட நபர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறை பொலிஸார், உடனடியாக இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

எனினும் குறித்த சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படாமையினையடுத்து குறித்த மிரட்டல் வதந்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மிரட்டல் குறித்து அபிராமபுரம் பொலிஸ் நிலைய பொலிஸார்ர் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்தவர் பேசிய கைத்தொலைபேசி இயக்கத்தின் அடிப்படையில் சைபர் கிரைம் பொலிஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் ஏற்கனவே, புதுச்சேரி முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.