ரணில் அணிக்கு 10 ஆசனங்கள்! சஜித் அணிக்கு 20 ஆசனங்கள்!! – மஹிந்த அணி ஆரூடம்

“நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்கும். ரணில் அணி வெறும்  10 ஆசனங்கள் மட்டுமே பெறும். அதேவேளை, சஜித் அணி 20 ஆசனங்களுக்கு மேல் பெறவேமாட்டாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எந்தக் கட்சியுடனும் போட்டியில்லை. ‘தாமரை மொட்டு’ அதிக ஆசனங்களுடன் – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பெறும்.

எதிர்க்கட்சிகள் எமது கட்சிக்கு எந்தவிதத்திலும் சவாலாக அமையாது. அந்தக் கட்சிகள் தங்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றன; அரசுடனான ‘டீல்’  தொடர்பில் போட்டிக்கு ஏட்டியாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

‘டீல்’ செய்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை ‘தாமரை மொட்டு’க்கு இல்லை. தனித்து நின்று ஆட்சியமைப்பதே எமது பிரதான நோக்கம். அது நிறைவேறியே தீரும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்