நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கிறோம்- மஹிந்த

நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களின் துன்ப, துயரங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யட்டியந்தோட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்ததில் இருந்து நாடாளுமன்றத்தின் ஆதரவு இல்லாமல் அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அரசியல் மற்றும் உலக நடப்புகளை கருத்திற்கொண்டு தூர நோக்கு கொள்கையுடன் கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணையை கடந்த பெப்ரவரியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமையை சுட்டக்காட்டிய அவர், அரசாங்கத்தை நிதி நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில் எதிர்த் தரப்பினர் அந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரச நிர்வாகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் துரிதமாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தடைப்பட்டதாகவும் தேவையற்ற விடயங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கடந்த அரசாங்கம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது நெருக்கடியான நிலையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்காவிடின் மீண்டும் பலவீனமான அரச நிர்வாகமே தோற்றம்பெறும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.