இலங்கையில் கொரோனா சாவுகள் உச்சமடையும்! – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

“வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மக்கள் இறக்கின்றார்கள். இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது போன்று கொரோனா சாவுகளும் எதிர்வரும் நாட்களில் உச்சத்தை அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் – சரியான பொறிமுறையை வகுக்காமல் அரசு இருந்தால் எதிர்வரும் நாட்களில் நாடு பேராபத்தைச் சந்திக்க வேண்டி வரும். நாடு முழுவதையும் தொடர்ந்து முடக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

தற்போது கொரோனாவால் வீடுகளுக்குள்ளேயே மக்கள் இறக்கின்றார்கள். பிரேத பரிசோதனைகளின்போதே அவர்களுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுகின்றது. இதனால் நாடெங்கிலும் வீடு வீடாகச் சென்று பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சில மணி நேரத்துக்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசு உடனடியாக வகுக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைரஸ் பரவுவதை உடன் கட்டுப்படுத்துவது கடினமாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.