மருதமுனையில் இரண்டு நாட்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
(றாசிக் நபாயிஸ்)
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த மாதம் திங்கட்கிழமை 28ஆம் திகதி இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு மேற்குறித்த பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் ஒவ்வொரு நாளும் இடம் பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி அவர்களின் வழிகாட்டலில் 07ஆம் திகதி மருதமுனை கடற்கரை பகுதியில் பின்னேரங்களில் பொழுதை கழிக்க வரும் நபர்களில் 54 பேருக்கு எழுமாறாக மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவர்களுடன் தொடர்புடைய 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதே போன்று 08ஆம் திகதியும் கடற்கரை பகுதியில் 19 பேருக்கு எழுமாறாக மேற்கொண்ட பரிசோதனையின் போது 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கல்முனை பகுதியை கொரோனா பரவலிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இனங்காண்பதற்காகவும் இந்த பரிசோதனைகள் இடம் பெறுவதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை