யாழ் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (23)இடம்பெற்றது.

மாவட்டத்தின் விவசாய துறை சம்பந்தமான பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது . இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வங்கிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையிலான இடைவெளி மிக அதிகமாக காணப்படுகிறது.எனவே பிரதேச மட்டத்தில் தொடர்பு கொண்டு விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான உரிய தீர்வுகளை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டுமெனவும் உரிய தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உரிய திணைக்களங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென அரச அதிபரால் வலியுறுத்தப்பட்டது. மேலும் வெங்காய பயிரிடுவதற்கான கால எல்லை தைமாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் பாடசாலைகளில் இணைக்கப்படும் ஒவ்வொரு மாணவர்களுக்கும்
” குழந்தைகளுக்கான மரத்தோட்டம் ” என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய மா, தோடை,தேசி,மாதுளை,மற்றும் பலாமரம் ஆகியன வழங்கப்படவுள்ளதாகவும் விவசாயப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பெய்த மழையின் தாக்கத்தினால் நோய் தாக்கம் மற்றும் நெல் வயல்கள்அழிவடைந்ததன் காரணமாக நெல் கொள்வனவு விலையினைதேசிய மட்டத்தில் உள்ளதைப் போல் அல்லாது யாழ்மாவட்டத்திற்கு அதனை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் விவசாயிகளுக்கென வங்கிகளினால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதற்கிணங்க குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைப்புக்கள் மட்டத்தில் பிரதேச செயலாளர்கள் ஊடாக குறித்த வங்கிக்கடன் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் விதை உற்பத்தி நிலையத்திற்கென யாழ்மாவட்டத்தில் தகுந்த இடம் ஒன்றினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி விதை உற்பத்தி நிலையத்திற்கு சென்று விவசாயிகள் தமது விதை பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதனால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் விதை உற்பத்தி நிலையத்தினை அமைத்தல் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் பிறிதொரு இடத்தினை கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.