ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் ; முழு மலையகம் முடங்கும்!

(க.கிஷாந்தன்)

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி நாளை (05) தினம் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி தொழிற்சங்கம் வர்க்க இன மத மொழி பேதம் பாராமல் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனால் கல்வி போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதனாலும் நாளைய தினம் மலையகத்தில் முழு அர்தாலாக இருப்பதனாலும் நாளை மலையகம் முடங்கும் என இன்று (04) சுதந்திர தினத்தில் ஹட்டனில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்க பொதுச்செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் என்பது ஒரு சமூக பிரச்சினை இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் கல்வி சுகாதாரம் ,போசாக்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கியுள்ளன.

இந்நிலையில் இவர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் ஆகவே தான் நாங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க நேற்று முடிவு செய்தோம். ஆகவே ஆசிரியர்கள் அதிபர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறை அறிவித்து வீட்டிலிருந்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தவிர்த்து கொள்ளுமாறும் இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளன.

இது குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் ….

முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் கல்வியியல் காங்கிரஸ்ஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்புக்கு ஆசிரியர் விடுதலை முன்னணி, பொதுச் செயலாளர் எஸ்.டி.நாதன் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் மலையக ஆசிரியர் முன்னணியின் இணைப்பாளர் கின்ஸிலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில் சகல ஆசிரிய தொழிற்சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர் சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன காரணம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை என்பது சாதாரணமாக சம்பள பிரச்சினையும் தாண்டி ஒரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர். ஆகவே ஆசிரியர் சமூகம் என்ற வகையில் நாங்கள் இதனை வேடிக்கை பார்த்து இருக்க முடியாது நாட்டில் ஏனைய பிரதேசங்களை ஒரு பிரச்சினை வரும் போது அர்தாலாக நடத்தி அப்பிரச்சினையினை வெற்றி பெருகின்றனர்.

 

ஆனால் மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலை அதனை ஏற்படுத்துவதற்கு அனைத்து ஆசிரிய சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம் எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்து போராட்டத்திற்கு சுகயீன லீவு அறிவித்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.டி.நாதன். கருத்து தெரிவிக்கையில்.. நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பதில் பெருமையடைகின்றோம் இந்த போராட்டத்தில் சிங்கள ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளார்கள் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் ஆகவே சுகயீன லீவு அறிவித்து இந்தபோராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அதிபர் ஆசிரியர்கள் அனைத்து பிரிவினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவரும் ஆசிரிய கல்வியியல் காங்கிரஸ்ஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் கருத்து தெரிவிக்;கையில் இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையினை ஒரு சமூக பிரச்சினையாக கருதி ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

எனவே தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைய ஆசிரியர் அதிபர்கள் சுகயீன லீவு கோரி இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் அதே நேரம் பெற்றோர்கள் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதோடு நேற்று பல தரப்பினர் எம்மிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அது மாத்திரமின்றி முச்சக்கரவண்டி சங்கங்கள், தனி பேருந்து சாரதிகள், வர்த்தகர்கள் என பலரும் இந்த போராட்டத்தினை முன்னின்று நடத்துவதற்கு முன்வந்துள்ளனர் ஆகவே இந்த போராட்டம் மலையகத்தில் பூரண அர்த்தாலாக மாறும் என இவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.